உறவுக்கு என்றும் இரண்டு பக்கம் (சிறுகதை – சிலாபம் திண்ணனூரான்)

0 114

சிலாபம் திண்ணனூரான்

நேசம் இது அதி­க­மானால் அறுந்­து­விடும். பாசம் இது இரும்புச் சங்­கிலி. இற்றுப் போகாது. இதை அறுக்­கவும் முடி­யாது. அன்பு இது உண்­மையில் உணவு. இதை உண்­ணா­விட்டால் உயிர்­வாழ இய­லாது. இந்து மூன்று கல­வையும் சேர்ந்த முக்­க­ல­வைதான் உறவு. இந்த தொலைந்து போன உறவை நான் பல நாட்­களாய் தேடி அலைந்தேன்.

நேற்று மதியம் அந்த அறுந்து­ போன இற்றுப் போகாத உறவு மீண்டும் எனக்குக் கிடைத்­தது. பிஞ்சு வயது உறவு என்­றுமே அழி­வ­தில்லை. சூறா­வளி வந்து, அடை­மழை பெய்து, சமுத்­திரம் பொங்கி எழுந்து, சுனா­மி­யாக துள்­ளிக்­கு­தித்­தாலும் எங்­களின் உற­வை­மட்டும் ஒழிக்க முடி­யாது. தொலைந்து போன அந்த உறவு மீண்டும் கிடைத்­ததை உறு­திப்­ப­டுத்த என் அப்­பா­வுக்குச் சொல்­ல­வேண்டும் என நினைத்து கம்­பி­யூட்டர் மேசையில் உட்­கார்ந்தேன்.

அப்­போது இரவு மணி ஒன்­பது. அன்­றைய தினம் பௌர்­ணமி தின­மாகும். வானத்தின் உச்­சி­யி­லி­ருந்து வெள்­ளி­நிலா தன் வெளிச்­சத்தை பூமிக்கு அனுப்­பிக்­கொண்­டி­ருந்­தது.

எனது நான்கு வயதில் என் பாட்டி நிலாக்­கதை சொல்லி எனக்கு சோறு­ஊட்­டிய காலம் என் மனதில் கருப்பு –வெள்ளை திரைப்­ப­டமாய் விழுந்­தது.

அப்­போது என் டுயூட்­டியும் முடிந்து இருந்­தது. இன்று முற்­பகல் கண்ட அந்த கேவலக் காட்­சியை என் அப்­பா­வுக்கு ஈமெ­யிலில் எழுதத் தொடங்­கினேன்.

அன்­புள்ள அப்­பா­வுக்கு,
நலம், நலம் அறிய அவா.
எனது கைப்­பேசி இன்று காலையில் தண்­ணீரில் விழுந்து விட்­டது.

இப்­போது அது இயங்க மறுக்­கி­றது. அத­னால்தான் ஈமெ­யிலில் இன்று நான் கண்ட அசிங்­கத்தைத் தெரி­விக்­கிறேன். கட்­ட­விழ்த்து விடப்­பட்ட யானை, மரங்­க­ளையும், செடி கொடி­க­ளையும் வேரோடு பிடுங்­கிப்­போ­டு­கி­றது. ஆனால், அதன் பாகன் கூரிய அங்­கு­சத்தால் அதன் தலையில் குத்­தி­யதும் அது சாந்­த­மாகி விடு­கி­றது. ஆனால் வைராக்­கியம் கொண்ட மனி­தனை மட்டும் அடக்க சட்­டத்­தாலும் முடி­யா­துள்­ளது.

இன்று எமது நாட்டின் தலை­விதி நாறிப்­போன நெய்­யை­விட மிக மோச­மாகக் காணப்­ப­டு­கி­றது. இதனால் இரு­பத்தி நான்கு மணித்­தி­யா­லமும் நான் டியூட்­டிக்குள் குதிக்க ஆயத்­த­மாக இருக்­க­வேண்டும்.

நாம் தொலைந்த உறவை இன்று போவத்தை, கிணி­ய­மவில் கண்டேன். இதை எழுதும் போது எனது கண்­களில் கண்ணீர் கசி­கின்­றது. கம்­யூட்­டரில் எழுத்­து­களை டைப் செய்ய என் கை விரல்கள் மறுக்­கின்­றன. சிலா­பத்தில் எனது படை முகாமில் இன்று காலை கட­மை­யி­லி­ருந்­த­போது திடீ­ரென அறி­விப்பு ஒன்று எமக்குக் கிடைத்­தது. பிங்­கி­ரிய போவத்தை கிணி­யம கிரா­மத்தில் பெரும் குழப்பம் ஏற்­பட்டு விட்­ட­தான அறி­விப்பே அது­வாகும்.

எனக்கு டுயூட்டி கிணி­ய­ம­விற்கு மாற்­றப்­பட்­டது. எனது ஜீப் வண்டி சிலா­பத்­தி­லி­ருந்து பிங்­கி­ரிய சென்று போவத்­தையை அடைந்து அதன் சந்தை வீதி ஊடாக கிழித்துச் செல்லும் கிணி­யம கிரா­மத்தை நோக்கி மின்னல் வேகத்தில் பறந்­தது.  கிணி­யம கிரா­மத்தை ஜீப்­வண்டி தொட்­டதும் எனக்குள் அதிர்­வ­லைகள் எழுந்­தன. பல வீடுகள் எரிக்­கப்­பட்டு சின்­னா­பின்­னப்­பட்டு இருந்­தன.

கடை­களில் பொருட்கள் சூறை­யா­டப்­பட்டு தீ வைத்து கொளுத்­தப்­பட்டுக் கிடந்­தன. ஒரு கடையின் முன் பகு­தியை தீ விழுங்­கிய நிலையில் பின் பகுதி தீயால் விழுங்க இய­லாது தோற்றுப் போய் புகையைக் கக்­கிக்­கொண்­டி­ருந்­தது. யாரோ ஒரு ஏழையின் வடைத்­தட்டு உடைக்­கப்­பட்டு வீதி­யோ­ரத்தில் தலை­குப்­புறக் கிடந்­தது. ஒரு ஏழைக் குடும்­பத்தின் பசியை ஆற­வைக்கும் வாய்­பேச இய­லாத அவ்­வ­டைத்­தட்டு என்ன பாவம் செய்­தது.

எனக்கு இக்­காட்­சி­களைப் பார்த்­ததும் துக்கம் என் தொண்­டையை கட்டிப் போட்­டது. சன நட­மாட்­டமே இல்­லாமல் வீதி வெறிச்­சோ­டிக்­கி­டந்­தது. வெள்ளம் பெருகும் நதி­களும் ஒரு­முறை வரண்டு போய் விடு­கி­றது. குளங்­களும் கோடையில் பட்­டி­னியால் வற்றி மழை­கா­லத்தில் நிரம்­பு­கின்­றன.

நிலங்கள் வரண்ட பின்­னரே பசு­மை­ய­டை­கின்­றன. மரங்கள் இலை­யு­திர்ந்து பின் தளிர்­விட்டு வள­ரு­கின்­றது. ஆனால், மனி­தர்கள் மனி­தர்­க­ளையே அழித்து விட்­ட­னரே. ஏன் இவ்­வ­ளவு மோச­மாக குழப்­பக்­கா­ரர்கள் நடந்­து­கொண்­டனர். இத்­துன்­பமும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு சோத­னை தான். மனி­த­நேயம் செத்­துப்போய் விட்­டதோ? எனக்கு இந்த சந்­தே­கத்­திற்கு இது­வரை விடை கிடைக்­க­வில்லை.

விலங்கு விலங்­கோ­டுதான் சேர்ந்து வாழ்­கி­றது. ஆனால் மனிதன் மனி­த­னோடு இணைந்து வாழ யுத்தம் பண்­ணு­கிறான். மதம், சாதி, இனம், மொழி என வேறு­பட்டு குண்­டு­களை வெடிக்க வைத்து மனிதன் மனி­தர்­களைக் கொலை­செய்து குவிக்­கிறான். பற­வைகள், விலங்­குகள், ஜந்­து­களை விட மனிதன் மிகக்­கே­வ­ல­மாக வாழ்­கின்றான். பற­வைகள், விலங்­குகள், ஜந்­து­க­ளுக்கு சிரிக்­க­மு­டி­யாது.

பேச இய­லாது. ஆனால் தங்­களின் உற­வு­களை வளர்த்­துக்­கொள்­கி­ன்றன. மனி­தனால் சிரிக்­கவும், பேசவும், அழவும், சிந்­திக்­கவும் முடியும். ஆனால், மனி­தனால் ஒற்­று­மை­யாக மட்டும் வாழ இய­லாது உள்­ளது. புதிய சமு­தா­யத்தை படைக்கப் போகிறேன் எனக் கூறிக்­கொண்டு தற்­கொலை குண்­டு­தா­ரி­யாக மனம்­மாறி கொலை­யா­ளி­யாக மாறு­கி­றானே. இதனால் மனி­தர்­களின் உறவு கலைக்­கப்­ப­டு­கி­றது. அந்­நி­யப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

சிலாபம் கடலில் சங்­க­ம­மாகும் தெதுறு ஓயா ஆற்­றங்­க­ரையில் வாழும் கிணி­யம மக்கள் என்ன பாவம் செய்­தார்கள். வானத்­தையும், பூமி­யையும் நம்பி வாழும் இவர்கள் அப்­பாவி மருத நில விவ­சாயக் கூட்­டத்­தி­னரே இம்­மக்கள் கும்பல். வானத்­தி­லி­ருந்து மழை விழுந்­தால்தன் நெல் விதைக்க சேத்­து­வயல் மண்ணில் கால் பதிப்­பார்கள்.

இவ்­வா­றான இயற்­கை­யுடன் வாழும் இக்­கி­ராமம் கல­கக்­கா­ரர்­களால் கிழித்து நாசப்­ப­டுத்­தப்­பட்­டுக் ­கி­டந்­தது. எங்கும் அவ­லக்­கு­ரல்கள் பல­மாக ஒலித்­தன. எல்­லோரின் முகத்­திலும் ஒரு­வித அச்சம் குடி­கொண்­டி­ருந்­தது. பள்­ளி­வா­ச­லுக்கு அண்­மித்த தூரத்தில் இருந்த ஒரு பெரிய வீட்டின் மீது தீயின் எச்சில் துப்­பப்­பட்டு, அந்த தீ எச்சில் அவ்­வீட்டை முழு­வ­து­மாக தனது அகோர பசிக்கு உள்­வாங்கி இருந்­தது.

அவ்­வீட்டின் முற்­றத்தில் இரண்டு வயது பிஞ்­சுக்­கு­ழந்­தையின் செருப்புச் சோடி ஒன்றும், பால் போத்தல் சூப்பி ஒன்றும் கிடந்­தன. இதைக் கண்­டதும் எனது மனசு கொந்­த­ளித்­தது. அதற்கு அருகே பாவாடை ஒன்றும் தாவணி ஒன்றும் தீயின் பொறாமைக் கோபத்­திற்குள் விழுந்து வெந்தும், வேகா­மலும் கிடந்­தன. படை­யினர் அனை­வரும் பள்­ளி­வா­சலில் நுழைந்தோம். எல்­லோரும் பயந்து முகம் கசங்கி அச்­சத்­துடன் நின்­றனர். எங்­களைக் கண்­டதும் பலர் வியப்­ப­டைய அவர்­களின் கண்­களில் கண்ணீர் கசிந்­தது.

காடை­யர்­களின் அட்­டூ­ழி­யத்தை அனு­ப­வித்த அவர்­களை என்ன சொல்லி நான் சமா­தா­னப்­ப­டுத்­து­வது. காயத்­துக்கு மருந்து பூசலாம். ஆனால் மனக்­கா­யத்­துக்கு என்ன விலை கொடுத்தும் மருந்­து­போட முடி­யாது. ஒவ்­வொ­ரு­வரும் தங்­களின் பாதிப்­பையும், தங்­களின் உயிரை எப்­படிக் காப்­பாற்றிக் கொண்டோம் என்­பதை எம்­மிடம் தெரி­விக்­கையில் அவர்­களின் துன்பம் என்­னையும் சோத­னைக்குட் படுத்­தி­யது.

காலத்தால் வெல்ல இய­லாத கொடூ­ர­மான தாக்­கு­தல்­களை அவர்கள் அனு­ப­வித்­தி­ருக்­கி­றார்கள். நானும் அதி­ர­டி­யாக அதிர்ந்­து­போனேன். இதேபோன்­றுதான் கட்­டு­வா­பிட்­டிய தேவா­ல­யத்தில் பயங்­க­ர­வா­தியின் தற்­கொலை வெடி­குண்டு சம்­ப­வத்தில் உயிர் தப்­பி­ய­வர்கள் தெரி­வித்த தக­வல்கள். அப்பா இவைகள் எல்லாம் என் நெஞ்­சி­ருக்கும் வரை என்னால் மறக்க முடி­யாதவை.

இருப்­பது போதும். வரு­வது வரட்டும். போவது போகட்டும். மிஞ்­சு­வது மிஞ்­சட்டும் என பலர் புலம்­பு­வதும் என் காதில் விழுந்­தது. அந்தக் கூட்­டத்தில் இருந்து என்னை நோக்கி ஒரு ஆண் குரலின் சத்தம் விழுந்­தது. “தம்பி” என்ற அக்­குரல் வந்த திசையை நோக்கி என் பார்­வையை வீசினேன்.

அங்கு இஸ்மயில் நானா நின்று கொண்டிருந்தார். அவரின் உருவம் என் பார்­வைக்குள் விழுந்­ததும் நான் விக்­கித்­துப்­போனேன். படா­ரென “நானா” என கத்­தி­ய­வாறு அவர் நின்ற இடத்­துக்கு ஓடினேன். என்னைப் பார்த்து அழுதார். தொடர்ந்து தேம்பித், தேம்பி அழுதார். அவரின் சோகம் அவரை விட்டு விலகும் வரை அழட்டும் என நானும் மௌனம் காத்தேன். இஸ்­மயில் நானாவே என் மௌனத்தை கலைத்து விட்டார்.

“வாப்பா, உம்மா சுகமா இருக்­கி­றார்­களா?” கேள்வி எழுப்­பினார். இந்த அவ­லத்­திலும் வாப்பா, உம்மா சுகமா இருக்­கி­றார்­களா? என இஸ்­மயில் நானா என்­னிடம் கேட்­டதும் என் அடி வயிற்றில் அவரின் மனி­த­நேயம் வலி எடுக்க வைத்­தது.

“ஆமாம். நீங்கள் எப்­படி நானா இங்கு வந்­தீர்கள்.”
“நான் வடை வியா­பாரம் செய்ய இந்த கிரா­மத்­துக்கு வந்தேன். இங்கு வந்த சில காலத்தின் பின்னர் இங்­கேயே திரு­மணம் செய்து செட்டில் ஆகி­விட்டேன். என் வாப்பா உம்மா எல்­லோரும் கண்­டியில் தான் வாழ்­கின்­றனர்” என்றார் இஸ்­மயில் நானா.
“எங்கே மத­னியை காட்­டுங்கள்” என்றேன். இஸ்­மயில் நானா மத­னியைக் காட்­டினார். மத­னியும் ஏழு­மாத கர்ப்­ப­வ­தி­யாக இருந்தார். நான் இப்ப என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டேன்.

தம்பி எனது வடை­தட்­டுத்தான் இந்த கிரா­மத்து சந்­தியில் காடை­யர்­களால் உடைத்து வீதி­யோ­ரத்தில் வீசப்­பட்­டுக்­கி­டக்­குது. எனக்கு உடுத்த உடை இல்லை. அவ­ளுக்கும் உடைகள் இல்லை. எல்லா உடை­களும் காடை­யர்­களின் அட்­ட­கா­சத்தின் போது தீ விழுங்கி விட்­டது. நாங்கள் இனி எங்கு போவது? என்ன செய்­வது. எப்­படிப் பிழைப்­பது. ஒன்­றுமே எனக்கு விளங்க மாட்­டேங்­குது என சொல்லி இஸ்­மயில் நானா தேம்பித் தேம்பி அழுதார்.

“அழா­தீர்கள் நானா. நீங்கள் தொடர்ந்து அழுதால் மத­னியும் அழு­வார்கள். எது நடந்­தாலும் தைரி­யத்தை இழந்து விடா­தீர்கள். இன்று டுயூட்டி முடிந்து கேம்ப் போனதும் அப்­பா­வுக்கு எல்­லா­வற்­றையும் தெரி­விக்­கிறேன். எல்லா உத­வி­க­ளையும் செய்­கிறேன்” என நான் சொன்­னதும் அவரின் அழுகை நின்­றது.

எங்­களின் படை டாக்­ட­ரிடம் மத­னிக்கு சிகிச்­சை­களை பெற்­றுக்­கொ­டுத்தேன். டாக்டர் கர்ப்­ப­வ­திக்குத் தேவை­யான அனைத்து மருந்­து­க­ளையும் மத­னிக்குக் கொடுத்தார். நான் கொண்டு சென்ற உணவு வகை­க­ளையும் அவர்­க­ளிடம் வழங்­கினேன். போவத்தை நக­ருக்குச் சென்று இரு­வ­ருக்கும் தேவை­யான உடை­களை கொள்­முதல் செய்து கொடுத்தேன்.

அப்பா நீங்கள் ஒரு உத­வியைச் செய்­யுங்கள். இஸ்­மயில் நானா குடும்பம் எம்­மோடு ஒன்­றாக வாழ்ந்த குடும்பம். இந்­நே­ரத்தில் எம்­மைத்­த­விர யார் இஸ்­மயில் நானா­வுக்கு உதவ இருக்­கி­றார்கள். வாப்பா வாப்பா என உங்கள் பின்­னா­லேயே சுத்தி வந்த பையன்தான் அப்பா இந்த இஸ்­மயில் நானா.

நாளை காலையே நீங்கள் எமது காரில் கிணி­யம சென்று இஸ்­மயில் நானா­வையும் மத­னி­யையும் கொழும்­புக்கு எமது வீட்­டுக்கு அழைத்து வாருங்கள். மதனி கர்ப்­ப­மாக இருப்­பதால் வைத்­தி­ய­ரிடம் காட்டி சிகிச்­சை­களைப் பெற­வை­யுங்கள். கிணி­யம போகும்­போது அம்­மா­வையும் அழைத்துச் செல்­லுங்கள். நான் திங்­கட்­கி­ழமை வரு­கிறேன்.

அன்பு மகன்
பிந்திய எனது ஈமெயில் கடிதம் அப்­பா­வையும் அம்­மா­வையும் அதிர வைத்­தது. இந்த இரவு நேரத்தில் அந்த பிள்­ளைத்­தாய்ச்சி என்ன கஷ்­டப்­ப­டு­கி­றாளோ தெரி­ய­வில்லை. என்னா சாப்­பிட்­டாளோ தெரி­ய­வில்லை. என் அம்மா புலம்­பினாள்.

“நோனா. இஸ்­ம­யில்லும் நம்ப பிள்ளை மாதி­ரித்­தானே எமது கண்டி வீட்டில் சின்ன வயதில் ஓடி ஆடி விளை­யா­டியவன். இப்­பவே இந்த இருட்டில் போகலாம். ஊர­டங்குச் சட்டம் வேற அமுலில் இருக்கு. விடி­யட்டும் எல்லாம் நல்­ல­படி நடக்கும்” என சொன்னார் என் அப்பா.

மறுநாள் விடிந்­ததும் ஊர­டங்குச் சட்­டமும் காலை ஏழு மணிக்கு தளர்த்­தப்­பட்­டது. என் அப்­பாவும் அம்­மாவும் காரில் கிணி­யம நோக்கி பய­ண­மா­னார்கள். மதியம் பதி­னோரு மணிக்கு கிணி­யம பள்­ளி­வா­சலின் முற்­றத்தில் கார் நின்­றது.

என் அப்­பாவைக் கண்­டதும் இஸ்­மயில் நானா வாப்பா என கத்திக்கொண்டு ஓடி வந்து அப்பாவைக் கட்டிப்பிடித்து அழுதான். அவனின் கண்ணீரை என் அம்மா தன் சேலை முந்தானையால் துடைத்து விட்டார். பள்ளிவாசலில் பாதுகாப்பு கடமையில் நின்ற படையினர் இக்காட்சியைக் கண்டு வியப்படைந்தனர்.

இப்போது கார், இஸ்மயில் நானா, அவரது மனைவி அமீனா, என் அப்பா ரிடயர் பிரின்சிபல் விபுலசேன, என் அம்மா பொடி மெனிக்காவையும் ஏற்றிக்கொண்டு மீண்டும் கொழும்புக்கு தன் பயணத்தை ஆரம்பித்தது. 

இப்போது காரின் பின் சீட்டில் என் அம்மாவின் மடியில் அமீனா மதனி தன் தலை சாய்த்து உறங்கிக்கொண்டு இருந்தார். அமீனா மதனியின் தலைமுடியை வருடியவாறு என் அம்மா ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்தார்.

அப்­போது இஸ்­மயில் நானாவின் கலக்­கமும் கலைந்­தது. பிறப்பால் தொடரும் உற­வு­க­ளல்­லாமல், பிணைப்பால் தொடரும் உற­வு­களே உன்­ன­த­மா­னவை. இது எங்கே தெரி­கி­றது, பயங்­க­ர­வா­தி­க­ளுக்கும், காடை­யர்­க­ளுக்கும், அரசியல்வாதிகளுக்கும்!

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!