முஸ்லிம் மயானத்தில் அடக்கப்பட்டிருந்த சடலம் தோண்டியெடுக்கப்பட்டு முருங்கைமர சேனையில் மறைத்துவைப்பு

0 1,455

                                                                          (ரெ.கிறிஷ்ணகாந்)
மாத்தளை, கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிகவெஹெர, பல்லேவல பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்று, தோண்டியெடுக்கப்பட்டு வேறொரு இடத்தில் வைக்கப்பட் டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கலேவெல பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்றுக் காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, பல்லேவெல பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மயானத்தில் கடந்த 28 நாட்களுக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட நபரின் சடலமே காணாமல் போயிருந்தமை தெரியவந்துள்ளது.

இந்த சடலத்தை கண்டுபிடிப்பதற்கு அதற்கு அருகில் சில தினங்களுக்கு முன்னர் சடலம் புதைக்கப்பட்ட இரு குழிகளும் தோண்டப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளையடுத்து, காணாமல் போன சடலம் சுமார் 200 மீற்றர் தூரத்திலுள்ள முருங்கை மரச்சேனை ஒன்றில் மண்ணினால் மூடப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சடலம் கலேவெல, பல்லேவெல பிரதேசத்தில் வசித்துவந்த ஹபீப் லெப்பை மன்சூர் (50) என்பவரினது என பொலிஸாரின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. சடலத்தை தோண்டியவர்கள் யார்? எதற்காக சடலத்தை தோண்டினர் என்பன தொடர்பில் உறுதியாக அறியப்படவில்லை என பொலிஸார் கூறினர்.

இந்நிலையில், சடலம் தொடர்பாக மீண்டும் நீதிவான் அறிக்கைகளை பெற்று மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர். சடலம் கண்டு பிடிக்கப்பட்ட இடம் மற்றும் மயானத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கலேவெல பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் சானக்க வீரரத்ன தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!