துபாயின் ஆட்சியாளர் ஷேக் அல் மக்தூமின் மனைவி இளவரசி ஹயா துபாயிலிருந்து வெளியேறினார்!

திருமண வாழ்க்கை முறிவடைந்ததனையடுத்து அச்சத்தினால் வெளியேறியதாக கூறப்படுகிறது

0 4,070

துபாயின் ஆட்சியாளரான ஷேக் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தூமின் மனைவியரில் ஒருவரான இளவரசி ஹயா பிந்த் அல் ஹுசைன், அச்சம் காரணமாக தனது இரு பிள்ளைகளுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து தப்பிச் சென்றுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

இத்தம்பதியின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட முறிவையடுத்து, இளவரசி ஹயா பிந்த் அல் ஹுசைன் (45) லண்டனில் மறைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

69 வயதான  ஷேக் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தூம், ஐக்கிய அரபு இராச்சியத்தின் (யூ.ஏ.ஈ) உப ஜனாதிபதியாகவும்,  பிரதமராகவும் பதவி வகிக்கிறார். அத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஒரு பிராந்தியமான துபாயின் ஆட்சியாளராகவும் விளங்குகிறார்.

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரான ஷேக் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தூம் குறைந்த பட்சம் 6 தடவைகள் திருமணம் செய்தவர். அவருக்கு 9 மகன்கள், 14 மகள்கள் என 23 பிள்ளைகள் உள்ளனர்.

ஷேக் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தூமும் இளவரசி ஹயா பிந்த் அல் ஹுசைனும் 2004 ஏப்ரல் 10 ஆம் திகதி திருமணம் செய்தனர்.

ஜோர்தானின் முன்னாள் மன்னர் ஹுசைனின்  மகள்தான் இளவரசி ஹயா பிந்த் அல் ஹுசைன். இவர் ஜோர்தானின் தற்போதைய மன்னர் அப்துல்லாவின் சகோதரி ஆவார்.

ஷேக் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தூம், இளவரசி ஹயா பிந்த் அல் ஹுசைன் தம்பதியருக்கு 11 வயதான மகள் ஜுலியாவும் 7 வயதான மகன் ஸயீத்தும் உள்ளனர்.

இப்பிள்ளைகள் இருவருடனும் இளவரசி ஹயா பிந்த் அல் ஹுசைன் கடந்த 11 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தம்பதியினரின் திருமண வாழ்வில் ஏற்பட்ட முறிவையடுத்து அச்சம் காரணமாக, இளவரசி ஹயா பிந்த் அல் ஹுசைன்  நாட்டிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. அவர் தன்னுடன் சுமார் 31 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

அவர் ஜேர்மனியில் அரசியல் புகலிடம் கோரியதாகவும் முன்னர் செய்தி வெளியாகியது.  எனினும், தற்போது அவர் லண்டனில் தலைமறைவாக உள்ளார் எனக் கூறப்படுகிறது.

ஷேக் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தூமின் மகள்மாரில் ஒருவரான இளவரசி  ஷேக்கா லத்தீபா கடந்த வருடம் துபாயிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்தார். எனினும் இந்து சமுத்திரத்தில் அவர் இடைமறிக்கப்பட்டு மீண்டும், துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே ஷேக் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தூமின் மனைவியரில் ஒருவரான இளவரசி ஹயா பிந்த் அல் ஹுசைன் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து தப்பிச் சென்றுள்ளார் எனக் கூறப்படுகிறது.

மிக இளம் வயதிலேயே குதிரையோட்டத்தில் ஈடுபட ஆரம்பித்த இளவரசி ஹயா பிந்த் அல் ஹுசைன், 13 வயதிலிருந்து சர்வதேச குதிரையோட்ட நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வருகிறார். பான் அராப் குதிரையோட்டப் போட்டிகளில் பதக்கம் பெற்ற முதல் ஜோர்தானியப் பெண் இவர். 2000 ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் ஜோர்தான் சார்பாக இவர் பங்குபற்றினார்.  

பிரிட்டனின், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இளவரசி ஹயா பிந்த் அல் ஹுசைன்,  திருமணத்தின் பின்னர், தனது கணவர் நிலையிலேயே ஷேக் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தூம் சகிதம் விளையாட்டு நிகழ்ச்சிகளில் அதிதியாக கலந்துகொண்டதுடன், பல்வேறு காரூண்ய சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!