குருணாகல் வைத்தியர் ஷாபி இன்று விடுவிக்கப்படுவாரா?

0 207

                                                                                                                                          (எம்.எப்.எம்.பஸீர்)
குருணாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது சி.ஐ.டி. தலைமையகமான நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவு வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி தொடர்பில் வி‍சேட அறிக்கை ஒன்றை சி.ஐ.டி. இன்று (11) குருணாகல் நீதிவான் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கவுள்ளது. வைத்தியர் ஷாபி விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று குருணாகல் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வரும் நிலையிலேயே இந்த வி‍சேட விசாரணை அறிக்கையை முன்வைக்க சி.ஐ.டி. தீர்மானித்துள்ளது. .

குறிப்பாக இன்றைய விசாரணைகளின் போது, முதன் முறையாக வைத்தியர் ஷாபி நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தெரிய வருகிறது. இது தொடர்பில் விசேட பாதுகாப்பு கட்டமைப்பு ஒன்றை அமுல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் சி.ஐ.டி. முன்வைக்கவுள்ள வி‍சேட அறிக்கையில் பிரதானமாக மூன்று விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியை தொடர்ந்து 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிப்பது நியாயமாக அமையாது என சி.ஐ.டி. பாதுகாப்பு செயலர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொடவுக்கு எழுதிய கடிதத்துக்கு பாதுகாப்பு அமைச்சிடமிருந்து கிடைத்துள்ள பதில் மற்றும் ஆலோசனைகள், கடந்த ஜூன் 27 ஆம் திகதி வழக்கு விசாரணையின்போது குருணாகல் வைத்தியசாலை பணிப்பாளர் வழங்கிய அறிக்கை ஒன்றை மையப்படுத்திய விசாரணைகளின் முன்னேற்றம், கருத்தடை விவகாரத்தில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த 615 தாய்மார்களில் 147 பேரை என்.எஸ்.ஜி. சோதனைக்கு உட்படுத்துவதா அல்லது வேறு ஏதும் பரிசோதனை முறைகளுக்கு உட்படுத்துவதா என்பது உள்ளிட்ட விடயங்களே இந்த அறிக்கையூடாக சி.ஐ.டி. நீதிமன்றுக்கு அறிவிக்கவுள்ளதாக நம்பப்படுகின்ரது.

எவ்வாறாயினும் கடந்த தவணை விசாரணைகளின் போது, சி.ஐ.டி. வைத்தியர் ஷாபி விவகாரத்தில் முன்வைத்த விடயங்கள், இதுவரையிலான விசாரணைகளில் ஷாபிக்கு எதிராக வெளிப்படுத்தப்படாத சாட்சிகள் மற்றும் ஜனாதிபதி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கொடுத்துள்ள உறுதி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது பெரும்பாலும் அவர் இன்று பிணையில் விடுவிக்கப்படலாம் என தெரிகின்றது.

கடந்த மே 24 ஆம் திகதி குருணாகல் பொலிஸாரால் வைத்தியர் ஷாபி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 6 (1) ஆம் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். அப்பிரிவின் கீழ் அவரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அப்போது குருணாகல் பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்க அனுமதி பெற்றிருந்தார். அதன்பின்னரே வைத்தியர் ஷாபியை சி.ஐ.டி. பொறுப்பேற்றனர். அதன் படி அவரை விசாரிக்க பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 9(1) ஆம் பிரிவின் கீழ் பாதுகாப்பு செயலாளரிடம் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவை சி.ஐ.டி. பெற்றுக்கொண்டு நடத்திய விசாரணைகளிலேயே ஷாபி வைத்தியருக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை தெரியவந்திருந்தது.

இதனைவிட கடந்த மே 24 ஆம் திகதி வைத்தியர் ஷாபியை, குருணாகல் வைத்தியசாலையின் நான்கு வைத்தியர்கள் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே தாம் கைது செய்ததாக குருணாகல் பொலிஸார் கூறிய நிலையில், அது பொய்யென சி.ஐ.டி. விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நான்கு வைத்தியர்களையும் சி.ஐ.டி. க்கு அழைத்து விசாரித்ததில் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வைத்தியர் ஷாபியை கைது செய்ய முன்னர் 23 ஆம் திகதி குறித்த வைத்தியர்கள் பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கியதாக குருணாகல் பொலிஸாரால் கூறப்பட்ட நிலையில் அதனை மையப்படுத்தி வைத்தியரைக் கைது செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர். எனினும் வைத்தியர் ஷாபி 24 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த வைத்தியர்கள் மே 26 ஆம் திகதியே ( இரு நாட்களின் பின்னர் ) அந்த வாக்கு மூலங்களை வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனை அதில் இரு வைத்தியர்கள் ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!