புதையல் தோண்ட எதிர்ப்புத் தெரிவித்த பெண் கடத்திக் கொலை!

0 250

                                                                                                                              (ரெ.கிறிஷ்ணகாந்)
வீட்டுத் தோட்டத்தில் காணப்பட்ட புதையல் ஒன்றைத் தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படும் பெண் உருவர் கடத்திக் கொலை செய்யப்பட்டு காட்டுக்குள் வீசப்பட்டிருந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வில்கமுவ பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தளை, வில்கமுவ, கெம்புருஓய பிரசேத்தைச் சேர்ந்த அளுத்கெதர சுதுமெனிக்கே என்ற 62 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டவராவார். இப்பெண் கடந்த 4 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது வீட்டார் வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அம்முறைப்பாட்டில், புதையலை தோண்டி எடுப்பதற்காக அடிக்கடி தமது வீட்டுக்கு ஒரு குழுவினர் வருவதாகவும், வீட்டுத் தோட்டத்தில் புதையல் தோண்டுவதற்கு அப்பெண் மறுப்புத் தெரிவித்து, குறித்த குழுவினருடன் முரண்பட்டிருந்ததாகவும் வீட்டார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வில்கமுவ பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, உயிரிழந்த பெண் பயன்படுத்திய கைத்தொலைபேசி பிறிதொரு நபரால் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளனர். அதற்கமைய., மிகவும் சூட்சுமமான முறையில் குறித்த கைத்தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி அதனை பயன்படுத்தும் சந்தேகநபரை கமுண என்ற பிரதேசத்தில் கடந்த 9 ஆம் திகதி கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், மேலும் ஐவர் குறித்த பெண்ணை வேனொன்றில் கடத்திச் சென்று லக்கல, ரம்புக்ஒலுவ பிரதேசத்திலுள்ள பாழடைந்த இடமொன்றில் வைத்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து, யானைகள் பயணிக்கும் பாதையில் சடலத்தை போட்டுச் சென்றுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

சந்தேகநபரின் வாக்குமூலத்துக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது, நேற்றுமுன்தினம் சடலத்தை கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடுமையாக அழுகிய நிலையில் காணப்பட்ட குறித்த சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

.கடத்தல் மற்றும் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் வில்கமுவ, கும்புக்கந்தன பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைதுசெய்வதற்காக வில்கமுவ பொலிஸ் நிலையத்தின் மூலம் பொலிஸ் குழுக்கள் சிலவற்றை ஈடுபடுத்தி மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!