சவூதி இசை நிகழ்ச்சியை பாடகி நிக்கி மினாஜ் இரத்துச் செய்தார்; சவூதியின் மனித உரிமைகள் நிலைமைகள் காரணமாக தீர்மானம்

Nicki Minaj cancels Saudi Arabia concert over human rights concerns

0 3,591

சவூதி அரேபியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

 சவூதி அரேபியாவில் பெண்கள், பாலின சேர்க்கையாளர்கள், பாலின மாறிகள் சமூகத்தின் உரிமைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது இசை நிகழ்ச்சியை இரத்துச் செய்வதாக பாடகி நிக்கி மினாஜ் அறிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நடைபெறும் ஜெத்தா உலக  விழாவின் (Jeddah World Festival,) ஒரு பகுதியாக பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது.

ஜெத்தா நகரில் எதிர்வரும் 18 ஆம் திகதி நிக்கி மினாஜின் இசை  நிகழ்ச்சி நடைபெறும் என சவூதி அரேபிய இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கடந்த 2 ஆம் திகதி  உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர்.

ட்ரினிடாட் அன்ட் டுபாக்கோவில் பிறந்த நிக்கி மினாஜ், அமெரிக்காவில் வசிக்கிறார்.  2004 ஆம் ஆண்டு முதல் நிக்கி மினாஜ் இசைத்துறையில் ஈடுபட்டு வருகிறார். இசைத்துறையில் ஏராளமான விருதுகளை வென்றவர் அவர். 36 வயதான ரெப் இசையின் ராணி எனவும் அவர் வர்ணிக்கப்படுகிறார்

அரைகுறை ஆடைகளுக்கும் தனது இடையை சுழற்றி நடனமாடுவதற்கும் பெயர் பெற்ற நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி சவூதி அரேபியாவில் நடைபெறப் போகிறது என்ற அறிவிப்பு பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது. 

பொழுதுபோக்குத்துறை மீதான் பல தசாப்தகால கட்டுப்பாடுகளை சவூதி அரேபியா தளர்த்துகின்றமை ஒரு அறிகுறியாக இந்த இது கருதப்பட்டது. சவூதி அரேபியர்களில் இந்நிகழ்சிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் குரல்கொடுத்திருந்தனர்.

இந்த அறிவிப்பு மேலும் சர்ச்சைகளையே ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், சவூதி அரேபியாவின் பெண்கள் மற்றும் ஒரு பாலின சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இந்நிகழ்ச்சியை தான் இரத்துச் செய்வதாக நிக்கி மினாஜ் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு உரிமைகள் இல்லாத நாட்டில் தான் இசை நிகழ்ச்சி நடத்த விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ள நிக்கி மினாஜ், சவூதி அரேபிய அரசை அவமதிக்கும் நோக்குடன் இத்தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வூதி அரேபியாவின் மனித உரிமை நிலைமைகளுக்கு எதிர்ப்பு

சவூதி அரேபியாவின் மனித உரிமை நிலைமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்நிகழ்ச்சியை இரத்துச் செய்ய வேண்டும் என நிக்கி  மினாஜுக்கு அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் மன்றம் கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியிருந்தது.

ஆட்சியாளர்களின் பணத்தை நிராகரிக்குமாறு நிக்கி மினாஜிடம் மனித உரிமைகள் மன்றம் கோரியிருந்ததுடன், சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களான பெண்களை விடுவிப்பதற்கு தனது செல்வாக்கை நிக்கிமினாஜ் பயன்படுத்த வேண்டும் எனவும் கோரியிருந்தது.

அதையடுத்து, சவூதி அரேபியாவில் நடைபெறவிருந்த தனது இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யவதாக பாடகி நிக்கி மினாஜ் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். 

இது தொடர்பாக நிக்கி மினாஜ் விடுத்த அறிக்கையொன்றில்,  ‘கவனமான சிந்தனைகளின் பின்னர், ஜெத்தா உலக விழாவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள எனது இசை நிகழ்ச்சியை முன்னெடுப்பதில்லை எனத் தீர்மானித்துள்ளேன். 

 பெண்கள் மற்றும் ஒருபாலின சேர்க்கையாளர்கள், பாலின மாறிகள் சமூகத்தின் (LGBTQ community.)உரிமைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எனது ஆதரவைத் தெரிவிப்பது முக்கியமானது என நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டமை குறித்து பலர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இசை நிகழ்ச்சியைப் பார்வையிடுவதற்காக செலுத்தப்பட்ட கட்டணங்களை திருப்பித் தர வேண்டும் என ரசிகர்கள் கோரி வருகின்றனர். அதேவேளை, இந்நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டமை நல்ல விடயம் என வேறு பலர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி:
 
 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!