சினிமாவில் 60 ஆம் ஆண்டை ஆரம்பிக்கும் உலக நாயகன்

0 645

நடிப்பு, இயக்கம், பாடலாசிரியர், கதாசிரியர், தயாரிப்பு என பன்முகத்தன்மையோடு இயங்கி வரும் கமல். நேற்றுடன் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து 59 ஆண்டுகள் நிறைவு ஆகிறது. 60 ஆவது ஆண்டை வெற்றியோடு எடுத்து வைத்து வீறுநடை போட்டு வருகிறார்.

        

களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமாகி இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக இருந்து வளர்ந்த பின்னர் இவருக்கு வாய்ப்புக்கள் அப்படி ஒன்றும் வந்து குவிந்து விடவில்லை.

பரத நாட்டியம், குச்சுப்பிடி, மேற்கத்திய நடனம் என்று அத்தனையிலும் கை தேர்ந்த கமல்ஹாசன் நடிக்க வாய்ப்புக்கள் இல்லாமல் என்ன செய்வது என்று சலித்து உட்காரவில்லை.

இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டவர் நடன இயக்குநர் வேலைகள் செய்து வந்தார்.

அவரது விடா முயற்சியே இன்று அவரை உச்சத்தில் நிறுத்தியுள்ளது. உலகில் வேறு எந்த நடிகருக்குமே இல்லாத சிறப்பு இவருக்கு உண்டு. அதாவது, இவர் போடாத வேஷமே இல்லை எனலாம்.

நாய­கன், வில்லன், பெண் என எல்லாக் கதாபாத்திரங்களுமாகவே அவர் நடித்திருக்கிறார்.

இல்லையில்லை திரையில் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அதனால் தான் ரசிகர்கள் அவரை உலகநாயகன் என்கிறார்கள்.

மொழிகளைத் தாண்டிய கலைஞனாய் வலம் வரும் கமல், ஆசிரியர், பொலிஸ், டாக்டர் என படத்திற்கு படம் கெட்டப்களை மாற்றக் கூடியவர்.

தன் இமேஜ் மாறி விடக் கூடாது என நினைக்காமல், கதைக்கு தேவைப்பட்டால் தன்னை எவ்வளவு வேண்டுமானாலும் வருத்­திக் கொள்ளத் தயாராய் இருக்கும் தன்னிகரற்ற கலைஞன் கமல்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, அவர் நடித்த படங்களில் சில முத்தான படங்கள் பற்றிய தொகுப்பு உங்களுக்காக.

அன்பே சிவம்: இந்தப் படத்தைச் சொல்லா­மல் நிச்சயம் கமலின் சினிமா வரலாற்றைக் கடந்து போக முடியாது. மாற்றுத்திறனாளியாக வித்தியாசமான தோற்றத்தில் ‘அன்பே சிவம்’ படத்தில் கமல் நடித்திருப்பார்.

ஆனால், அவர் தன் கதாபாத்திரம் மூலம் உலகிற்கு சொல்ல வந்த கருத்தோ வலுவானது.

எல்லாதரப்பு மக்களையும் இப்படம் சென்றடையவில்லை என்ற போதும், இன்றளவும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

கமல் இரண்டு வேடங்களில் நடித்த படங்­க­ளில் இதுவும் ஒன்று. ஆனால், இளம் வயது கமலை விட வயதான கமல் அதிகம் அப்ளாஸ் வாங்கினார்.

இந்தக் கதாபாத்திரத்திற்காக பல மணி நேரம் சிரத்தை எடுத்து கமல் மேக்கப் போட்டுக் கொண்டார். அவரது உழைப்பு வீணாகவில்லை.

இன்றளவும் அந்தப்படம் மக்கள் மனதில் நீங்காமல் உள்ளது. அதோடு, லஞ்சத்திற்கு எதிராக அவர் கொடுத்த குரலின் தாக்கம் இன்னமும் ‘இந்தியன் தாத்தா’ என எதிரொலிக்கிறது. ‘இந்தியன் 2’ படம் விரைவில் தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்கேல் மதன காமராஜன்: தசாவதா­ரத்­திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கமல் நான்கு வேடங்களில் நடித்த படம் மைக்கேல் மதன­காமராஜன்.

மைக்கேல், மதன், காமேஸ்வரன், ராஜூ என நான்கு கேரக்டருக்கு நான்கு விதமான உடல்மொழிகளை கையாண்டு கலக்கியிருப்பார்.

இதிலும் பாலக்காடு பாஷை­யில் பேசும் காமேஸ்­வரனின் வசனங்கள், 80’ஸ் கிட்ஸ்க்கு எவர்டைம் பேவரைட்.

நாயகன்: கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவான ‘நாயகன்’ படம் தான் இன்ற­ளவும் சினிமா ரசிகர்களால் கொண்டா­டப்படும் எவர்டைம் கிளாசிக். வாலிபன், நடுத்தர வயதுக்காரர், முதியவர் என ஒரு மனிதனின் மூன்று காலகட்டத்தில் மிக தத்ரூபமாக காட்டியிருப்பார் கமல்.

இந்த படத்தில் அவர் பேசும், “நாலு பேர் நல்லாருக்கனும்னா எது­வும் தப்பில்ல”, “அவங்கள நிறுத்த சொல் நான் நிறுத்துறேன்” என்பது உள்­ளிட்ட பல வசனங்கள், இன்­றைக்கும் ஏதோ ஒருவிதத்தில் பயன்ப­டுத்தப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.

இந்த படத்தை பற்றி எழுத ஒரு கட்டுரையே போதாது எனும் போது, ஒரு பாரா எப்படி போதும்?

அவ்வை சண்முகி: ஒரு ஆண் அப்படியே அச்சு அசலாக பெண்ணாக மாறி கலக்க முடி­யும் என கமல் நிரூ­பித்த படம் தான் அவ்வை சண்முகி.

காதல், பாசம், நேசம், செண்டிமெண்ட் உள்ளிட்ட அனைத்தையும் நகைச்சுவையாக சொல்லியிருப்பார் இந்த படத்தில்.

பாண்டியனா­கவும், சண்முகியாகவும் மாறி மாறி வந்து நமக்கு கிச்சிகிச்சு மூட்டுவார்.

இப்படி எல்லாம் மேக்கப் போட முடியும் என தமிழ் சினிமாவுக்கு காட்டியவர் கமல்.

தசாவதாரம்: ராமானுஜ நம்பி, கோவிந்த், பல்­ராம் நாயுடு, பூவரங்கன், வயதான பாட்டி, ஜார்ஜ் புஷ் என பத்து கேரக்டர்களில் வித்தி­யாசம் காட்டி நம்மை அசரடித்திருப்பார் கமல்.

ஒவ்வொரு கேரக்டரும் வித்தியாசமாக தெரிய வேண்டும் என்பதற்காக மிக நேர்த்தியாக நடித்திருப்பார்.

இதுவரை இவரது இந்த சாதனையை யாரும் முந்தவில்லை.

விஸ்வரூபம் : கமலின் திரைவாழ்வில் ஒரு படத்தை ரிலீஸ் செய்ய படாதபாடுபட்ட படம் என்றால் அது விஸ்வரூபம் தான்.

இந்த படத்­திற்கு எழுந்த எதிர்ப்பால் நாட்டை விட்டே வெளியேறப்போவதாக அறிவித்தார் கமல்.

படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று, அவரது காயங்களுக்கு மருந்து போட்டது.

படத்தில் வரும் முதல் சண்டை காட்சி, எத்தனைமுறை பார்த்தாலும் பிரமிப்பை ஏற்படுத்தக்கூடியது.

ஆத்திகத்தையும் அலசி ஆராய்ந்து பேசும் திறன் கொண்டவர் கமல். நாத்திகத்தையும் ஈடு இணையாக பேசுபவர்.

படிக்கும் ஆர்வத்தை இன்னும் இன்னும் என்று அதிகரித்துக் கொண்டே, மற்ற பணிகளை செவ்வனே செய்து வந்தாலும் நேரம் போதவில்லை என்று வாய் தவறியும் கூட சொல்லாதவர்.

இவரிடம் கற்க வேண்டியது அதிகம் என்றாலும், இவர் இன்னும் நமக்கு தர வேண்டியதும்,அதை நாம் பார்த்து மகிழ வேண்டியதும் அதிகம் இருக்கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!