மகனை மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்து விட்டு பூதவுடலை பார்த்து மன்னிப்புக் கோரிய தந்தை!

0 299

மண்வெட்டித் தாக்குதலில் உயிரிழந்த மகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, குறித்த மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தந்தை, நேற்று விசேட அனுமதியில், பலாங்கொடை, மஸ்ஸென்ன பிரதேசத்தில் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள வீட்டுக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துவரப்பட்டார்.

உயிரிழந்த நளின் தனஞ்சய (17) என்ற மாணவனின் பூதவுடலைப் பார்த்து, சந்தேகநபரான தந்தை, ‘மன்னித்துவிடு மகனே. நான் இதனை வேண்டுமென்று செய்யவில்லை’ என கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி தனது தாய் மற்றும் தந்தைக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையில். தந்தை மண்வெட்டிப் பிடியினால் தாய்க்கு மேற்கொண்ட தாக்குதலை தடுக்க முற்பட்டபோது, தாக்குதலுக்கு இலக்காகி தனஞ்சய படுகாயமடைந்திருந்தார். இந்நிலையில், 5 நாட்களாக இரத்தினபுரி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவர் கடந்த 12 ஆம் திகதி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்த விசேட விசாரணைகளில், உயிரிழந்த சிறுவனின் சகோதரியான 13 வயது சிறுமியின் வாக்குமூலத்துக்கமைய சந்தேகநபரான 39 வயதான தந்தை கைதுசெய்யப்பட்டதுடன், மண்வெட்டி பிடியையும் கைப்பற்றியிருந்தனர்.

சந்தேகநபர் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!