கலைஞனுக்கு மொழி ஒரு தடையல்ல -நடிகையும், மொடலுமான கந்தசாமி வசந்தகுமாரி

0 871

(ரெ.கிறிஷ்ணகாந்)

“போட்டோ ஷூட்­களை மேற்­கொள்­ப­வர்கள் அரை நிர்­வா­ண­மா­கவும், நிர்­வா­ண­மா­கவும் நடிக்­கு­மாறு என்­னிடம் கேட்­கும்­போது பெரிதும் மன­ச்சஞ்­ச­லத்­துக்கு உள்­ளாகி என்­னையே நான் நொந்­து­கொள்வேன்.

ஆனால் ஒரு­போதும் எவ­ருக்கும் அடி­ப­ணிந்­த­தில்லை எந்தத் தடை வந்­தாலும் தைரி­ய­மாக எதிர்­கொள்வேன்.

நான் எந்­த­   வொரு தப்­பான காரி­யமும் செய்­ய­வில்லை எனவே, நான் வீணாக பயப்­பட தேவை­யில்லை”

என இலங்­கையின் நடி­கையும், மொட­லு­மான கந்­த­சாமி வசந்­த­கு­மாரி தெரி­வித்­துள்ளார். 

மெட்ரோ நியூ­ஸுக்கு அவர் அளித்த நேர்­கா­ணலில் வசந்தகுமாரி இவ்வாறு கூறினார், அவருடனான நேர்காணல் விபரம்

கே: உங்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்.

ப: நான் வசந்தகுமாரி. வயது 26 சொந்த இடம் பசறை, லுணுகலை.

அங்குள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் நான் கல்விகற்றேன்.

நான் கல்விகற்கும் காலப்பகுதியிலேயே எனது தந்தை காலமாகிவிட்டார்.

அதன்பின்னர், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் நானும் எனது குடும்பத்தினரும் வசித்து வந்தோம். அதன்பின்னர் கொழும்புக்கு தொழிலின் நிமித்தம் இடம்பெயர்ந்தேன். ஆரம்பத்தில் தாதியாக பணியாற்றினேன்.

தற்செயலாக சிங்கள சினிமா துறையில் நடிகையாக பிரவேசித்த நான் பின்னர் மொடலாகவும் எனது தொழிற்துறையில் கால்பதித்தேன்.

கே: நடிப்பு துறைக்குள் உங்களது பிரவேசம் மற்றும் அனுபவம் பற்றி?
ப: ஒரு நடிகையாக வருவேன் என்று நான் கனவிலும் கூட நினைத்து பார்க்கவில்லை,

தந்தையின் மறைவின் பின்னர் எனது கல்வியை சாதாரண தரத்துடன் நிறுத்திக்கொண்டேன்.

அதன் பின்னர் தாதியாக (ஹோம் நேர்ஸிங்) பணியை ஆரம்பித்தேன்.

அப்போது சில திரைப்படங்களை பார்க்கும்போது நடிப்புத்துறைக்குள் நானும் பிரவேசிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது.

அதன்படி மிகவும் சிரமத்துக்கு மத்தியில் நண்பரொருவரின் உதவியுடன் ஸ்ரீ விக்ரம என்ற சிங்களத் திரைப்படமொன்றில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.

2 நிமிடங்கள் வந்து செல்லும் ஒரு சிறிய கதாபாத்திரமே எனக்கு வழங்கப்பட்டது.

முதன் முதலாக கெமரா முன் நடிப்பதற்கு பயமாக இருந்தபோதிலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததோடு அங்கிருந்தவர்களிடம் பாராட்டும் பெற்றேன்.

அதனையடுத்து, சிங்ஹல மஹா வங்ச என்ற சிங்கள வரலாற்று சின்னத்திரை நாடகமொன்றில் வேடுவ குலப் பெண்ணாக நடித்துள்ளேன்.

மேலும் சுது அங்குரு, கந்துலுமல, ஹித ஹொந்த த்ரீவீல் மல்லி போன்ற சிங்களத் திரைப்படங்களிலும் நடித்துள்ளேன்.

கே: தமிழ் பேசும் பெண்ணான நீங்கள் சிங்கள சினிமா துறையை தெரிவு செய்தது ஏன்?
ப:
இலங்கையை பொறுத்தவரையில் எந்தவொரு தமிழ்த்திரைப்படங்களிலும் நடித்ததில்லை.

எனினும், இன்னும் பெயர் அறிவிக்கப்படாத சிறிய பட்ஜட் தென்னிந்திய திரைப்படமொன்றில் நடித்துள்ளேன்.

இலங்கையில் தமிழ் சினிமாவை காட்டிலும் சிங்கள நடிப்புத்துறை தற்போது வளர்ச்சி கண்டுள்ளது எனலாம்.

எனவே, தமிழில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

ஆகவே தொடர்ந்து வாய்ப்புகள் வருவதால் சிங்கள நடிப்புத் துறையை தேர்வு செய்தேன்.

எனினும், இலங்கையின் மூத்த தமிழ் நடிகரான சந்திரசேகரன் போன்றோருடன் இணைந்து ஆவணப்படம் ஒன்றிலும் நடித்துள்ளேன்.

அதன்போது, அவர் நிறைய விடயங்களை எனக்கு சொல்லித் தந்தார்.

தமிழ் கலைஞர்களை காட்டிலும் அதிகமான அளவு சிங்கள கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதால் நான் ஒரு தமிழ்ப் பெண் என்ற அடையாளம் பெரிதும் வெளியில் தெரிவதில்லை.

கே: இந்த இடத்துக்கு நீங்கள் முட்டி மோதிவரும் வரையில் எதிர்நோக்கிய தடைகள் அல்லது சவால்கள் என்னென்ன?
ப:
நான் எனது நடிப்புப் பயணத் தை ஆரம்பிக்கும்போது மிகவும் ஏழ்மை நிலையிலேயே இருந்தேன்.

நடிப்பைப் பொறுத்தவரை சிலர் திறமையுள்ளவரை காட்டிலும் பணம் இருப்பவர்களையே அழைத்து முன்னுரிமை அளிக்கின்றனர்.

சில நிகழ்வுகளில் பங்கேற்கும் போது ஓரம் கட்டப் பட்டுள்ளேன். சிலர் எனது நடத்தைகளை விமர்சித்து காலை வாரி விட முயன்றனர்.

சில பொடோ ஷூட்களை மேற்கொள்பவர்கள்  அரை நிர்வாணமாகவும், நிர்வாணமாகவோ நடிக்குமாறு என்னிடம் கேட்கும்போது பெரிதும் மனச்சஞ்சலத்துக்கு
உள்ளாகி என்னையே நான் நொந்துகொள்வேன்.

ஆனால் ஒருபோதும் எவருக்கும் அடிபணிந்ததில்லை, எந்தத் தடை வந்தாலும் தைரியமாக எதிர்கொள்வேன்.

நான் எந்த வொரு தப்பான காரியமும் செய்ய வில்லை எனவே, நான் வீணாக பயப்படத் தேவையில்லை.

எனக்கு கிடைக்கும் வாய்ப்பை கிடைக்கவிடாமல் செய்வதற்காக வாய்ப்பளிப்பவரை பற்றி என்னிடம் தவறாக சித்திரிக்கும் முயற்சிகளையும் சிலர் மேற்கொண்டுவருகின்றனர்.

திறமையுள்ளவர்கள் முன்னேறுவதை பார்க்க விரும்பாதவர்கள் எல்லாத் துறைகளிலும் உள்ளனர்.

எனினும், தமிழ்ப் பெண் என்பவதற்காக சகோதர இன கலைஞர்கள் என்னை ஓரம்கட்டவில்லை. கலைக்கு இனப்பாகுபாடு கிடையாது.

கே: நடிகை வசந்தகுமாரி மொடலாக மாறியது எப்படி?
: புகைப்படம் எடுத்துக்கொள்வது எனக்கு மிகவும் பிடித்த விடயமொன்று.

நடிப்புத் துறையின் மூலமாக பழக்கம் ஏற்பட புகைப்பட கலைஞர்களின் தூண்டுதலால் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்ததுபோலவே மொடலிங் துறையிலும் தைரியமாக காலடி எடுத்துவைத்தேன்.

அதன்பின்னர் இதனை ஆர்வத்துடன் முன்னெ டுத்தேன். எந்த வகையான ஆடையிலும் புகைப் படத்துக்கு மொடலாக தோன்று வேன்.

எமக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ அதில் திறமைகளை வளர்த்துக் கொள்ளும்போது அதில் நிச்சயம் முன்னேற முடியும்.

எனவே, இன்று இலங்கையின் மொடலிங் துறையில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களின் பட்டியலில் பெயர் வரும் அளவுக்கு நான் முன்னேறி யுள்ளேன் என நினைக்கிறேன்.

கே: உங்கள் மொடலிங் துறை அனுபவங்கள் பற்றி குறிப்பிட முடியுமா?
ப:
நான் மொடலிங்கில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறேன்.

பல விதமான கோணங்களிலும் உடைகளிலும் மொடலாக விளம்பர படங்களுக்கு தோன்றியுள்ளேன்.

என்னை தூற்றியவர்கள் என் வளர்ச்சியை கண்டுகொள்ள எனது படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றுவதுண்டு. நான் செய்யும் தொழிலின் தன்மையை அறியாத ஊரார் என்னை விலைமாதுவைப் போல பார்க்கின்றனர் நான் செய்யும் தொழில் எனக்கு திருப்தி தருகிறது. இதுவரையில் சுமார் 20க்கும் மேற்பட்ட பொடோசூட்களில் தோன்றியுள்ளேன்.

பல வர்த்தக நிறுவனங்களுக்கான கலண்டர் விளம்பரங்களில் தோன்றியுள்ளேன்.

நான் எமது கலாசாரத்தை சீரழிப்பதை போல செயற்படுவதாகவும் எமது ஊரார் திட்டித்தீர்த்தனர்.

ஒவ்வொரு பொடோ சூட்டுக்கும் ஏற்றாற்போல இயக்குநரின் தேவைக்கேற்ப உடைகளை சரி செய்வது ஒரு மொடலினுடைய கடமை என நினைக்கிறேன்.

எனது தொழில் தன்மை எப்படி இருப்பினும் மனதளவில் நானும் ஒரு பெண்தான்.

எனினும், எதிர்மறையான விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் தொடர்ந்தும் எனது தொழில் துறையில் முன்னோக்கி செல்கின்றேன்.

கே: நீங்கள் உங்களது வாழ்க்கையில் சாதனை என நினைப்பது?
ப: ஒரு பின்தங்கிய மலையக பிரதேசத்திலிருந்து தனியாக தலைநகருக்கு வந்து இன்று இந்தளவு வந்துள்ளதையே ஒரு சாதனையாக நான் நினைக்கிறேன்.

அதன் பின் நாளுக்குநாள் நடிப்பு மொடலிங் என ஒவ்வொரு துறையிலும் புதிதாக ஏதாவதொன்றை செய்வதையும் சாதனை என கருதுகிறேன்.

எனது நடிப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக, அகில இலங்கை ஐக்கிய கலாசார மன்றத்தினால் கடந்த வருடம் எனக்கு தேசகெளரவ கீர்த்தி’ நாமம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கே: உங்களது அடுத்தகட்ட எதிர்பார்ப்பு என்ன?
ப:
தென்னிந்திய தமிழ் சினிமாதான். ஒரு பெரிய நடிகரின் படத்தில் சிறு பாத்திரம் ஏற்றேனும் நடித்திடவேண்டும்.

அனைவரும் பெருமைப்படும் படியாக நல்லதொரு நிலைமைக்கு வரவேண்டும் என்பது மட்டுமே எனது எதிர்பார்ப்பு.

தொடர்ந்தும் எனக்கு வாய்ப்புகள் வருகின்றன அதிலும் கவனம் செலுத்தி அடுத்தகட்ட நகர்வை மேற்கொண்டு வருகிறேன்

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!