ஸஹ்ரானுடன் தொடர்பு: 14 பேரின் விளக்கமறிலை நீடித்த கல்முனை நீதிமன்றம்!

0 278

                                                                                                             (பாறுக் ஷிஹான்)

                               வைப்பகப் படம்

ஸஹ்ரான் குழுவினருக்கு வாடகைக்கு வேன் வழங்கிய சந்தேக நபர்களான இளைஞர்கள் இருவரும் அழைப்பாணை ஏதேனும் விடுக்கப்பட்டால்   மாத்திரம்  ஆஜரானால் போதுமானது என்று கல்முனை நீதிவான் நீதிமன்றம் இன்று (04) அறிவித்தது.

குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பயங்கரவாதிகளால் தென்னிலங்கை பகுதியில் வெள்ளை ஆடைகள் கொள்வனவு செய்வதற்கு பயணிப்பதற்காக வாடகை அடிப்படையில் பெறப்பட்டு பயன்படுத்தப்பட்ட வேன் தொடர்பாக மட்டக்களப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தவர்களுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவர்களில் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த வேனை மற்றொருவர் மூலமாக பயங்கரவாதிகள் வாடகைக்கு பெற்றிருந்ததமை தொடர்பான வழக்கில் இவர்கள் இருவரையும் பிணையில் விடுவிப்பதற்கு வழக்காளியான பொலிஸ் தரப்பு ஆட்சேபிக்காதமையால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில்,  இன்று ஆஜரான இருவரும்  நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டால் மாத்திரம் ஆஜரானால் போதுமானது என நீதிவான் ஐ. என். ரிஸ்வான் உத்தரவிட்டார். இவர்கள் சார்பில் சட்டத்தரணிகளான என். சிவரஞ்சித் தெய்வநாயகம் மதிவதன் ஆகியோர் ஆஜராகினர்.

இதேவேளை பயங்கரவாதிகளுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் தொடர்புகளைக் கொண்டிருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைதாகி பல மாதங்களுக்கு மேலாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விசாரணைகள் நீதிவானின் பிரத்தியேக அறையில் நேற்று மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தொடர்ச்சியாக கடந்த காலங்களில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சில சந்தேக நபர்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராயப்பட்ட நிலையில் சந்தேகநபர்கள் 14 பேரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதி வரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!