கொக்கிளாயில் படகின் மீது துப்பாக்கிப் பிரயோகம், தாக்குதல்: அதிகாரிகள் உட்பட 12 கடற்படையினர் விளக்கமறியலில்

0 54

(ரெ.கிறிஷ்ணகாந்)

சந்தேகத்துக்கு இடமான வகையில் பயணித்த படகு ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் கடற்படையைச் சேர்ந்த சிப்பாய்கள், அதிகாரிகள் உட்பட 12 பேரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை, கொக்கிளாய் கடற்பகுதியில் மீனவப் படகொன்றை நிறுத்துமாறு, அதன்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் அதிலிருந்த நால்வரை தாக்கிய குற்றச்சாட்டுகளில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி இரவு கொக்கிளாய் கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படை படகினர், அப்பகுதியில் பயணித்த சந்தேகத்துக்கிடமான படகொன்றை அவதானித்துடன், நிறுத்துமாறு அப்படகை நோக்கி பல தடவை சமிக்ஞை காண்பித்தபோதும், அப்படகு நிறுத்தாமல் சென்றுள்ளது. அதன்காரணமாக அப்படகின் மீது கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.

இந்தச சம்பவம் இடம்பெற்ற மறுநாள் அதாவது, ஆகஸ்ட் 29 ஆம் திகதி காலை, இந்த சந்தேகத்துக்குரிய மீன்பிடி படகில் பயணித்ததாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் மூவரை கைது செய்த கடற்படையினர்,; அவர்களை குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததோடு அன்றைய தினம் பிற்பகல் அப்படகில் பயணித்ததாகக் கூறப்படும் மற்றொரு சந்தேகநபரொருவர் காயங்களுடன் கடற்படையினரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கடற்படையினரால் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், துறைமுக பொலிஸார், காயமடைந்த நபரையும் ஏனைய சந்தேகநபர்கள் மூவரையும் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அதற்கமைய, இந்த சம்பவம் தொடர்பில் துறைமுகப் பொலிஸாரால் அன்றைய தினத்திலேயே கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் இருவர் மற்றும் சிப்பாய்கள் 10 பேரிடம் வாக்குமூலத்தை பதிவுசெய்து அவர்களை விடுவித்திருந்தனர். அதனையடுத்து, துறைமுக பொலிஸார், கடந்த 30 ஆம் திகதி நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

அதற்கமைய, திருகோணமலை நீதிவான், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் நால்வரிடம் வாக்குமூலம் பெற்றிருந்தார்.

அதன்போது, கடற்படையினர் தம்மை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதுடன் தம்மையும் காயம் ஏற்படும் அளவுக்கு தாக்கியதாகத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காயமடைந்த சந்தேகநபர்கள் நால்வரையும் உத்தரவாதப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிவான் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு துறைமுக பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

விசாரணைகளை முன்னெடுத்த திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்படி கடற்படை அதிகாரிகள் இருவரையும், சிப்பாய்கள் 10 பேரையும் கைதுசெய்து நேற்றுமுன்தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, சந்தேகபர்கள் 12 பேரையும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் வரையில் எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுகப் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித் துள்ளது. உத்தரவை மீறி படகு தப்பிசெல்ல முயன்றபோது கடற்படையினரால் பாதுகாப்பான முறையிலான துப்பாக்கிப் பிரயோகமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், லெப்டினன் கொமாண்டர் சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கடற்படை சட்டம் மற்றும் ஏனைய சட்டத்தின் பிரகாரம் கடற்படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகார வரம்பினுள் மாத்திரமே குறித்த கடற்படையினர் செயற்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விசேடமாக குறித்த சட்டத்துக்கமைய, சந்தேகத்துக்குரிய படகை பரிசோதிக்கவும் அதனை கைப்பற்றவும் அதிகாரம் உள்ளது. சம்பவத்தின்போது கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரிடமும் உரிய மீன்பிடி அனுமதிப்பத்திரமோ, படகு பதிவு ஆவணமோ இருக்கவில்லை.

அத்துடன், மீன்பிடிக்கு தேவையான எந்த உபகரணத்தையோ அவர்கள் கொண்டிருக்கவில்லை. 50 ஆயிரம் ரூபா பணம் மாத்திரமே அவர்களிடமிருந்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தது என்றார்.

தாம் படகில் பயணித்த நோக்கம் குறித்த தெளிவான பதில் அளிக்கத் தவறியமையினாலேயே அவர்களை கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார். அவர்களில் ஒருவர் காயமடைந்திருந்த நிலையில், அவருக்கு முதலுதவி அளித்ததன் பின்னரே அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். எனினும், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவதை கடற்படையினர் முற்றாக மறுப்பதாகவும் கடற்படை பேச்சாளர் மேலும்கூறினார்.

எனினும், நீதிமன்ற உத்தரவுக்கு தாம் மதிப்பளிப்பதுடன், அந்த உத்தரவை சவாலுக்கு உட்படுத்துவதற்கு கடற்படைக்கு இயலுமை இல்லை. நாட்டின் பாதுகாப்புக்காக கடற்படையினர் பாரிய பங்களிப்பு செய்கின்றனர். அவ்வாறானவர்கள் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பததையிட்டு தான் கவலையடைவதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!