அலஸ்-குணசேகர கிண்ண கூடைப்பந்தாட்டம் றோயல் அணியை கேட்வே அணி சந்திக்கிறது
(நெவில் அன்தனி)
கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கொழும்பு கேட்வே கல்லூரிக்கும் இடையிலான 3ஆவது வருடாந்த கூடைப்பந்தாட்டப் போட்டி கொஸ்வத்தையில் அமைந்துள்ள கேட்வே கல்லூரி கூடைப்பந்தாட்ட அரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது.
இப் போட்டி அலஸ் – குணசேகர கிண்ணத்துக்காக நடைபெறவுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமான இத் தொடரில் அங்குரார்ப்பண போட்டியில் றோயல் கல்லூரியும் கடந்த வருடப் போட்டியில் கேட்வே கல்லூரியும் வெற்றிபெற்றிருந்தன.
கூடைப்பந்தாட்ட விளையாட்டை பிரசித்திபெறச் செய்யும் நோக்கிலேயே இந்த வருடாந்த கூடைப்பந்தாட்டப் போட்டி ஆரம்பிக்கப்பட்டதாக றோயல் கல்லூரி அதிபர் கே. ஏ. அபேரட்ன, கேட்வே கல்லூரி தலைவர் டாக்டர் ஹர்ஷ அலஸ் ஆகியோர் தெரிவித்தனர்.
றோயல் கல்லூரி அணிக்கு வெனுஜா கம்லத்தும் கேட்வே கல்லூரி அணிக்கு செவான் டி கொஸ்தாவும் தலைவர்களாக விளையாடுகின்றனர். இதேவேளை இந்த இரண்டு பாடசாலைகளினதும் 15 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அதனைத் தோடர்ந்து கேட்வெ கல்லூரிக்கும் தேவி பாலிகா வித்தியாலயத்துக்கு இடையிலான அழைப்பு கூடைப்பந்தாட்டப் போட்டி நடைபெறும். இப் போட்டி முடிவில் றோயல் கல்லூரிக்கும் கேட்வே கல்லூரிக்கும் இடையிலான போட்டி நடைபெறும்.
அலஸ் – குணசேகர கிண்ணத்துக்கான பிரதான போட்டிக்கு மலேசியாவில் இயங்கிவரும் மோனாஷ் பல்கலைக்கழகம் அனுசரணை வழங்குவதுடன் றோயல் கல்லூரி கூடைப்பந்தாட்ட ஆலோசனை மற்றும் முகாமைத்துவக் குழுவினரும் கேட்வே கல்லூரி கூடைப்பந்தாட்டக் குழுவினரும் இணைந்து நடத்துகின்றனர்.
(படப்பிடிப்பு: எஸ்.எம்.சுரேந்திரன்)