அணிக்கு எழுவர் ஆசிய றக்பி: இலங்கைக்கு நான்காம் இடம்

0 99

சீனாவின் ஹுய்சூவில் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்ற இரண்டாம் கட்ட அணிக்கு எழுவர் ஆசிய றக்பி போட்டியில் இலங்கை நான்காம் இடத்தைப் பெற்றது.

தென் கொரியாவின் இன்சொனில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடை பெற்ற முதலாம் கட்டப் போட்டியில் ஐந்தாம் இடத்தைப் பெற்ற இலங்கை, சீனாவில் பெரு முன்னேற்றம் அடைந்த அணியாக விளையாடி நான்காம் இடத்தைப் பெற்றது.

ஏ குழுவுக்கான லீக் சுற்றில் தென் கொரியாவை 28–5 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் சைனீஸ் தாய்ப் பேயை 26–17 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் வெற்றிகொண்ட இலங்கை, கடைசி லீக் போட்டியில் ஜப்பானிடம் 0 – 37 என்ற புள்ளிகள் அடிப்படையில் தொல்வி அடைந்து ஏ குழுவில் 2ஆம் இடத்தைப் பெற்று அரை இறுதியில் ஹொங்கொங்கை சந்திக்க தகுதிபெற்றது.

இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் ஹொங்கொங்கின் பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய இலங்கை 0–55 என்ற புள்ளிகள் அடிப்படையில் நேற்றைய தினம் தோல்வி அடைந்தது.

இதனை அடுத்து 3ஆம், 4ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் போட்டியில் ஜப்பானை எதிர்கொண்ட இலங்கை அப் போட்டியிலும் 0–40 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வி அடைந்தது. இப் போட்டியில் வெற்றிபெற்ற ஜப்பான் மூன்றாம் இடத்தைப் பெற்றதுடன் இலங்கை நான்காம் இடத்தைப் பெற்றது.

இரண்டாம் கட்ட இறுதிப் போட்டியில் சீனாவிடம் கடும் சவாலை எதிர்கொண்ட ஹொங் கொங் 14–7 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனானது. அணிக்கு எழுவர் ஆசிய கிண்ண மூன்றாம் கட்டம் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் எதிர்வரும் 28, 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, சீனாவில் நடைபெற்ற பெண்களுக்கான அணிக்கு எழுவர் ஆசிய றக்பி போட்டியில் இலங்கை மகளிர் அணி கடைசி இடத்தைப் (8ஆவது) பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!