உலக கனிஷ்ட பட்மின்டன் வல்லவர் போட்டிகள்: அணிகள் நிலையில் இலங்கை 26ஆவது இடம்
ரஷ்யாவின் கஸான் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் உலக கனிஷ்ட பட்மின்டன் போட்டிகளில் பங்குபற்றிய 43 நாடுகளில் அணி நிலை போட்டிகளில் இலங்கை 26ஆவது இடத்தைப் பெற்றது.
கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற 25, 26ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் போட்டியில் கனடாவிடம் 1–3 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் தோல்வி அடைந்ததால் இலங்கை 26ஆவது இடத்தைப் பெற்றது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கடும் சவாலை எதிர்கொண்ட இலங்கை 3–2 ஆட்டக் கணக்கிலும் தொடர்ந்து லிதுவேனியாவுடான போட்டியில் மிக இலகுவாக 3–0 என்ற ஆட்டக் கணக்கிலும் வெற்றிபெற்றதன் மூலமே 25, 26ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் போட்டியில் இலங்கை விளையாடியது.
எவ் குழுவில் இடம்பெற்ற இலங்கை, லீக் சுற்றில் பேருவை 4–1 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் வெற்றிகொண்டபோதிலும் தென் கொரியா, சிங்கப்பூர், ஸ்லோவேக்கியா ஆகிய அணிகளிடம் 1–4 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் தோல்வி அடைந்திருந்தது.
அணி நிலை போட்டிகளில் லோச்சன டி சில்வா, விரென் நெத்தசிங்க, சமத் டயஸ், துலித் பல்லியகுரு ஆகிய வீரர்களும் டில்மி டயஸ், பாஞ்சாலி அதிகாரி, சமுதி அபேவிக்ரம, அநுரங்கி மஸ்கோரள ஆகிய வீராங்கனைகளும் இலங்கை சார்பாக பங்குபற்றினர். இவ்வணிக்கு முன்னாள் தேசிய சம்பியனும் இரண்டு ஒலிம்பிக் அத்தியாயங்களில் பங்குபற்றியவருமான தில்லின ஜயசிங்க பயிற்சி அளித்துவருகின்றார்.
இவர்கள் ஆண்களுக்கான ஒற்யைர், இரட்டையர் போட்டிகளிலும் பெண்களுக்கான ஒற்றையர், இரட்டையர் போட்டிகளிலும் பங்குபற்றினர்.
தற்போது தனிநபர்களுக்கான போட்டிகள் நடைபெற்றுவருதுடன் இப் போட்டிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவடையும்.
அணி முகாமையாளராக இலங்கை பாடசாலைகள் பட்மின்டன் சங்கத்தின் செயலாளர் சமன் விஜேசிங்கவும் பெண்களுக்கு பொறுப்பாளராக மாலிகா வடுகேயும் இந்த சுற்றுப் பயணத்தில் இடம்பெறுகின்றனர். (என்.வீ.ஏ.)