பாடகியாக மேடையில் தோன்றுவதையே மிகவும் விரும்புகிறேன் -ஆண்ட்ரியா

0 1,357

‘‘நான் நடிகையாகத் திரையில் தோன்றுவதைவிட, ஒரு பாடகியாக மேடையில் தோன்றுவதையே மிகவும் விரும்புகிறேன்” எனக் கூறும் ஆண்ட்ரியா, சென்னையில் நடக்கவிருக்கும் ‘மடைதிறந்து’ இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் தீவிரமாகப் பங்கேற்றுவருகிறார்.

பாடகி சின்மயி, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ-யில் நடைபெறவிருக்கிறது.

‘வடசென்னை’ படத்துக்குப் பிறகு மீடியா வெளிச்சத்திலிருந்து கொஞ்சம் விலகியே இருந்த ஆண்ட்ரியாவிடம் இந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகையின்போது பேசினோம்.

உங்க நிகழ்ச்சியில் இளையராஜா பாட்டுக்கூட பாடுவீங்களா?
ஏன் பாடக்கூடாது. ராஜா சார் பாட்டுல எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு ‘வா வா பக்கம் வா’.

இந்தப் பாட்டைப் பாடும்போது, அவ்வளோ எனர்ஜி இருக்கும். தவிர, ஏற்கெனவே ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியிலும் இந்தப் பாடலைப் பாடினேன். என் மனசுக்கு நெருக்கமான பாட்டு இது!

வேற என்ன மாதிரி மியூசிக்கல் டிரீட் இருக்கும் இந்த நிகழ்ச்சியில?
” ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு’, ‘ஊர்வசி ஊர்வசி’ மாதிரி சில பெப்பி ேசாங்ஸ் எல்லாம் சேர்த்த ஒரு ‘மெட்லி’ பாடப்போறோம்.சின்மயிகூட சேர்ந்து நான் பாடப்போற முதல் மேடை இதுதான்.

எனக்கு ரொம்பப் பிடிச்ச பாடகி அவங்க.

அதையும் தாண்டி அவங்க துணிச்சலா சமீபத்துல முன்னெடுத்த முயற்சிகள் எல்லாமே அவங்களைப் பிடிக்கிறதுக்கான காரணம்.

அப்படி ஒரு சிங்கர்கூட சேர்ந்து பாடுறதே பெருமைதான்.

பாடகி ஆண்ட்ரியா, நடிகை ஆண்ட்ரியா… யார் உங்க ஃபேவரைட்?
ரெண்டும் ரெண்டு கண்ணு மாதிரி. தனித்தனியா நான் இதுதான் பிடிக்கும்னு சொல்லமுடியாது. ரெண்டுமே பிடிக்கும்.

என்ன ஒரு வருத்தம்னா, இந்த வருடம் நடிகை ஆண்ட்ரியா­வுக்குப் பெரிய வாய்ப்பு இல்லாம போச்சு.

பாடகியா மட்டும்தான் இருக்கேன். வந்த சில படங்களையும் கதை சரியில்லைனு மறுத்துட்டேன்.

‘வடசென்னை’ படத்துல வர்ற சந்திரா கெரக்டருக்கு நீங்கதான் வேணும்னு வெற்றி மாறன் உறுதியா இருந்தார்.ஆடிஷன் முடிஞ்சு ஆறு வருடம் கழிச்சும் உங்களைத்தான் படத்துல நடிக்க வெச்சார். அது ஏன்?
ஆறு வருடம் எனக்காகக் காத்திருக்கல. அந்தப் படம் தொடங்க ஆறு வருடம் ஆகிடுச்சுனுதான் சொல்லணும். மற்றப்படி, அந்தக் கெரக்டருக்கு நான் பொருந்தமா இருப்பேன்னு அவர் நம்புனதுதான் முக்கியமான காரணமா இருக்கும்னு நினைக்கிறேன்.

‘வடசென்னை’ படத்துல இருந்த நேட்டிவிட்டி, உங்க கெரக்டர்ல கொஞ்சம் மிஸ் ஆகியிருந்ததா விமர்சனம் வந்ததே.. அதை எப்படி எடுத்துக்கிட்டீங்க?
அந்தக் கேள்வி எனக்கும் இருந்தது. நான் வெற்றி மாறன்கிட்ட பலமுறை இதைக் கேட்டுட்டேன்.

அவரோட பதில் ஒண்ணுதான். ‘சந்திரா தனிச்சுத் தெரியணும்!’.

அந்தக் கெரக்டரோட மனநிலைதான் இந்த மொத்தப் படத்தையும் நகர்த்தும்.

அப்படியொரு துணிச்சலான பெண்ணா இருக்கணும்னு சொன்னார். நானும் ஓகே சொல்லிட்டேன்.

பெண்களை மையப்படுத்தி பல சினிமாக்கள் வருது. ‘தரமணி’யும் சரி, ‘வடசென்னை’யும் சரி… உங்க கதாபாத்திரத்தை சார்ந்துதான் மொத்தக் கதையும் இருக்கும். இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்குறீங்க?
நான் ‘வடசென்னை’யும், ‘தரமணி’யும் ஒரேமாதிரின்னு சொல்லமாட்டேன்.’வடசென்னை’யில தனுஷோட கதாபாத்திரம்தான் முக்கியமானது.

‘தரமணி’யில் எனக்கும் ஹீரோவுக்கும் ஒரேமாதிரி வாய்ப்பு இருக்கும். ஆனா, ரெண்டு படத்திலும் என் கேரக்டர்தான் முடிவெடுக்கிற இடத்துல இருக்கும்.

அந்தக் கெரக்டரைப் படத்துல இருந்து நீக்கிட்டா, அந்தக் கதைக்கு அர்த்தமில்லாம போயிடும்.

எல்லா நடிகைக்கும் இதுதான் எதிர்பார்ப்பா இருக்கும். இந்த மாற்றம் நல்லதுதான்.

‘தரமணி’ ஆல்தியா, ‘வடசென்னை’ சந்திரா… ரெண்டு கெரக்டர்ல யார் உங்களை மாதிரி?
கண்டிப்பா ஆல்தியாதான். எனக்கும் சந்திராவுக்கும் ரொம்பத் தூரம்.

நான் சந்திரா மாதிரி பழிவாங்குறவள் கிடையாது.

கோபத்தோட எல்லைக்கும் போறவள் கிடையாது. ஆல்தியா மாதிரிதான் நான்.

இந்த இசை நிகழ்ச்சிக்கு வர்றவங்க என்ன எதிர்பார்த்து வரலாம்?
அழகான மியூசிக்கல் டிரீட்தான்! அதுக்குமேல என்ன வேணும்.

ரெண்டரை மணிநேரம் முழுக்க முழுக்க இசைதான்.

‘சென்னை போரிங் சிட்டி’னு சொல்றவங்களுக்கும்தான் இந்த வாய்ப்பு. ஒழுங்கா டிக்கெட்டை வாங்கிட்டு வந்து பாருங்க.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!