19 வயது மாணவியை தீ மூட்டி கொன்றமை தொடர்பில் 16 பேருக்கு மரண தண்டனை: பங்களாதேஷ் நீதிமன்றம் தீர்ப்பு

16 people sentenced to death after Bangladesh 19 year old girl burnt alive

0 5,233

பங்காதேஷில் 19 வயதான மாணவியை எரித்து கொலை செய்தமை தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றம் 16 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நுஸ்ரத் ஜெஹான் ராபி (Nusrat Jahan Rafi ) எனும் 19 வயதான மாணவி பங்களாதேஷின் பேனி நகரில் கடந்த ஏப்ரல் மாதம் தீமூட்டி கொல்லப்பட்டார்.

நுஸ்ரத் ஜெஹான் ராபி 

அவர் கல்வி கற்றுவந்த பாடசாலையின் அதிபருக்கு எதிராக பாலியல் தொந்தரவு முறைப்பாடு செய்ததையடுத்து நுஸ்ரத் ராபி கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தனது அதிபர் சிராஜ் உத் தௌலா தன்னை முறையற்ற விதமாக தொட்டமை குறித்து பொலிஸாரிடம் நுஸ்ரத் ராபி முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். இதற்கு மறுத்ததால் அவர் தீமூட்டி கொல்லப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இக்கொலை விசாரணைக்குத் தலைமை தாங்கிய பொலிஸ் அத்தியட்சகர் மொஹம்மத் இக்பால் இது தொடர்பாக கூறுகையில்,   

“ஏப்ரல் 6 ஆம் திகதி மத பாடசாலையின் மொட்டை மாடிக்கு நுஸ்ரத் ராபி அழைக்கப்பட்டார். அவரை சூழ்ந்துகொண்ட நான்கு அல்லது ஐந்து பேர் மேற்படி முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தினர்.

இதற்கு நுஸ்ரத் ராபி மறுத்தபோது ஸ்கார்ப் ஒன்றினால் நுஸ்ரத் ராபியின் கை, கால்களை கட்டிவைத்துவிட்டு அவருக்குத் தீமூட்டினர். இதை தற்கொலையாக காண்பிப்பதற்கு அவர்கள் முயற்சித்தனர்.

ஆனால், தீயினால் ஸ்கார்ப் எரிந்ததால் தனது கைகள், கால்கள் விடுவிக்கப்பட்டவுடன் நுஸ்ரத் தீப்பற்றிய நிலையிலேயே படிகட்டு வழியாக கீழே வந்தார். இதனால் இக்கொலை முயற்சி அம்பலமாகியது” என்றார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நுஸ்ரத் ராபி, சிகிச்சை பலனன்றி கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி உயிரிழந்தார்.

நல்லடக்கத்தின்போது…


இது தொடர்பாக ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட 18 பேரில் நுஸ்ரத் ராபியின் வகுப்பு சகாக்கள் இருவரும் அடங்கியிருந்தனர்.

அதிபரே இக்கொலைக்கு உத்தரவிட்டார் என கைதானவர்களில் ஒருவர் வாக்குமூலம் அளித்தார் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இவ்விடயம் பங்களாதேஷில் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்தது. சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் வழக்கு விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த பங்களாதேஷ் நீதிமன்றம் 16 பேருக்கு மரண தண்டனை வழங்கி இன்று வியாழக்கிழமை தீரப்பளித்துள்ளது.

பாடசாலையின் அதிபர் சிராஜ் உல் தௌலா வுடன் பொலிஸார்…


 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!