‘முன்னாள் மனைவியின் குழந்தை என்னைப் போன்று இல்லை’ : மலேஷிய முன்னாள் மன்னர் தெரிவிப்பு: எந்த ஆசியரும் அதன் தந்தையாக இருக்கக்கூடும் நான் தந்தையல்ல என்கிறார்

Ex-Malaysian King Sultan Muhammad v of KelantanComplains of 'Evil' Russian Wife, Denies 5-Month-Old is His Son - Report

0 3,703

மலேஷியாவின் முன்னாள் மன்னர் 5 ஆம் சுல்தான் மொஹம்மத், தனது முன்னாள் மனைவி ஒக்ஸானா வோவோடினாவுக்குப் பிறந்த குழந்தைக்குத் தான் தந்தையல்ல என மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன் அக்குழந்தை தன்னைப் போன்ற தோற்றத்துடன் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கேலன்டன் மாகாண சுல்தானான (மாகாண அரசு தலைவர்) 5 ஆம் சுல்தான மொஹம்மத் 2016 டிசெம்பர் 13 ஆம் திகதியிலிருந்து மலேஷிய மன்னராக பதவி வகித்தவர்.

50 வயதான 5 ஆம் சுல்தான் மொஹம்மத், 2018 ஜூன் 7 ஆம் திகதி ரஷ்ய மொடலும் முன்னாள் அழகுராணியுமான 27 வயதான ஒக்ஸானா வோவோடினாவை திருமணம் செய்தார்.

அதன்பின் இவ்வருட ஜனவரி மாதம் மலேஷிய மன்னர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக 5 ஆம் சுல்தான் மொஹம்மத் அறிவித்தார்.

மலேஷியாவின் 9 மாகாணங்களிலுள்ள மாகாண பரம்பரை ஆட்சியாளர்  களலிருந்து (சுல்தான்கள்) சுழற்சி முறையில் மலேஷிய மன்னர் தெரிவு செய்யப்படுவார். அவர் 5 வருட காலம் மன்னராக பதவி வகிக்கலாம்.

ஆனால், மலேஷிய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பதவிக்காலம் முடிவடைய இரு வருடங்களுக்கு முன்னராகவே 5 ஆம் சுல்தான் மொஹம்மத் இராஜினாமா செய்தமை பெரும் வியப்பை ஏற்படுத்தியது. தற்போதும் கேலன்டன் மாகாண சுல்தானாக அவர் விளங்குகிறார்.

அதன்பின் கடந்த மே 21 ஆம் ஆண் குழந்தையொன்றை ஒக்ஸானா வோவோடினா பிரசவித்தார்.

கடந்த ஜூலை முதலாம் திகதி ஒக்ஸானா வோவோடினாவை 5 ஆம் சுல்தான் மொஹம்மத் விவாகரத்து செய்தார்.
அதேவேளை, இஸ்மாயில் லியோன் பெட்ரா இப்னி சுல்தான் மொஹம்மத் என பெயரிடப்பட்ட, ஒக்ஸானாவின் குழந்தைக்கு தான் உயிரியல் ரீதியான தந்தையல்ல என 5 ஆம் சுல்தான் மொஹம்மத் கூறி வருகிறார்.

ஆனால், லியோனின் தந்தை 5 ஆம் சுல்தான் மொஹம்மத் தான் என ஒக்ஸானா கூறியதுடன் இது தொடர்பாக மரபணு பரசோதனை செய்துகொள்ள வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார். இவ்விடயம் தொடர்பில் ரஷ்ய நீதிமன்றமொன்றில் வழக்கும் தொடுத்துள்ளார் ஒக்ஸானா வோவோடினா.

தற்போது 5 மாத வயதான லியோனை 5 ஆம் சுல்தான் மொஹம்மத் இதுவரை நேரில் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 தனது மகனின் புகைப்படங்களை ஒக்ஸானா வோடினா சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். தனது மகன் 5 ஆம் சுல்தான் மொஹம்மத் போன்றே இருப்பதாக அவர் கூறினார்.

  இந்நிலையில், அக்குழந்தையின் புகைப்படங்களை ஆராய்ந்த 5 ஆம் சுல்தான் மொஹம்மத், அக்குழந்தை தன்னைப் போன்ற தோற்றத்தில் இல்லை என தெரிவித்துள்ளார் என அரண்மனை வட்டாரமொன்று தெரிவித்தாக பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படி குழந்தை தன்னை போன்று இல்லை என 5 ஆம் சுல்தான் மொஹம்மத் கருதுகிறார் அத்துடன், ‘அக்குழந்தைக்கு எந்தவொரு ஆசிய நபரும் தந்தையாக இருக்கக்கூடும்’ எனவும் அவர் தெரிவித்ததாகவும் அரண்மனை வட்டாரம் தன்னிடம் தெரிவித்ததாக டெய்லி மெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் பிரபல்யத்துக்காகவே தன்னை ஒக்ஸானா வோவோடினா திருமணம் செய்தார் எனவும் தன்னுடனான திருமணத்தை தனது அனுமதியின்றி ஒக்ஸானா பகிரங்கப்படுத்தினார் எனவும் 5 ஆம் சுல்தான் மொஹம்மத் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!