திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்திராட்ச மாலை அணிவித்து வழிபாடு -அர்ஜூன் சம்பத் கைது

0 100

தஞ்சையில் அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு போர்த்தி ருத்திராட்சை மாலை அணிவித்து வழிபாடு செய்த அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார்.

தஞ்சையில் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா இன்று நடந்தது. இதையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கத்தினர் மாலை அணிவித்தனர்.

அதேபோல் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.இதன்பின்னர் அர்ஜூன் சம்பத் தலைமையில், மாநில இளைஞரணி பொது செயலாளர் குருமூர்த்தி, இளைஞரணி செயலாளர் கார்த்திக்ராவ் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டிக்கு சென்றனர்.

அங்கு மர்ம கும்பலால் அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு அர்ஜூன் சம்பத் மாலை அணிவித்து காவி உடை அணிவித்தார். பின்னர் சிலையின் கை, உடம்பில் விபூதி பூசினார். கழுத்தில் ருத்திராட்சை மாலை அணிவித்தார். இதையடுத்து திருவள்ளுவர் சிலைக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் ஏராளமான இந்து மக்கள் கட்சியினர் கலந்து கொண்டு திருவள்ளுவரை தரிசனம் செய்தனர்.பின்னர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் திருக்குறளின் பெருமைகளை பற்றியும், திருவள்ளுவரை பற்றியும் பேசி வருவது பாராட்டுக்குரியது. திருக்குறளின் கருத்துகளை மேற்கோள் காட்டி பேசி வருவது அவர் தமிழ் மொழி மீது வைத்துள்ள பற்றை காட்டுகிறது.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் தி.மு.க., தி.க. உள்ளிட்ட கட்சியினர் பேசி வருகின்றனர்.தஞ்சை அடுத்த பிள்ளையார் பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்த செயலுக்கு தி.மு.க.வுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கின்றேன்.

திருவள்ளுவர் ஒரு இந்து. அதனால் இந்து முறைப்படி தான் அவரை வழிபாடு செய்ய வேண்டும். அதன்பேரிலே தான் இன்று எனது தலைமையில் கட்சியினர் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து ருத்திராட்சை மாலை அணிவித்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தோம். அதில் என்ன தவறு இருக்கிறது.

ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திருவள்ளுவர் சிலையை அவமதித்தது இந்துக்கள் தான் என கூறி வருகிறார். இந்துக்களை பற்றி அவர் தவறாக பேசி வருவதை கடுமையாக கண்டிப்பதோடு அவரை எச்சரிக்கிறேன். உலகில் உள்ள அனைத்து திருவள்ளுவர் சிலைக்கும் இந்து முறைப்படி வழிபாடு நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்து மக்கள் கட்சியினரின் இந்த செயலால் பிள்ளையார்பட்டியில் மேலும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.இதையடுத்து அர்ஜூன் சம்பத்தை போலீசார் கைது செய்தனர். தஞ்சை எஸ்பி அலுவலகத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.திருவள்ளுவர் சிலைக்கு, அர்ஜூன் சம்பத் காவி உடை அணிவித்து ருத்திராட்ச மாலை அணிவித்த போது எடுத்த படம்.

நன்றி :மாலைமலர்

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!