விமானத்தில் யோகா பயிற்சி செய்ததால் இறக்கி விடப்பட்ட இலங்கை இளைஞர்;  பயணக் கட்டணத்தின் ஒரு பகுதி விமான நிறுவனத்தால் மீளச் செலுத்தப்பட்டது 

Passenger does Yoga in flight to Colombo , barred from flying

0 1,678

சென்னை விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க நோக்கி நேற்றுக்காலை புறப்படவிருந்த விமானத்தில் யோகா பயிற்சி செய்து பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்துகொண்ட இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டதாக சென்னை விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முறையான விசாரணைகளின் பின்னர், இவர் சென்னையிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சென்னை – கட்டுநாயக்க விமானம் பயணத்தை ஆரம்பிப்பதற்கு தயாரான நிலையில் பயணிகள் அனைவரும் தமது ஆசனத்தில் அமர்ந்து இருந்துள்ளனர். அதன்போது, குறித்த இளைஞர் திடீரென எழுந்து விமானத்தின் கதவுக்கு அருகில் சென்று அமர்ந்தபடி யோகா பயிற்சிகளில் ஈடுபட்டதுடன் உடற்பயிற்சியையும் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் இதுகுறித்து விமான ஊழியர்களுக்கு அறிவித்துள்ளனர். இருக்கையில் வந்து அமருமாறு ஊழியர்கள் கேட்டபோது, அவர் யோகாசனத்தை தொடர்ந்ததால் இது குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, விமானத்தை நோக்கி விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள் (மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்) அவரைக் கீழே இறக்கி விசாரணைகளை முன்னெடுத்தபோது முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். அத்துடன் அவரிடம் இலங்கை மற்றும் அமெரிக்க கடவுச்சீட்டுகளும் காணப்பட்டதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு வந்த இந்நபர் அங்கிருந்து வாரணாசிக்கும் அதன்பினர் சென்னைக்கும் வந்து பின்னர் கட்டுநாயக்கவுக்கு செல்வதற்காக பயணச்சீட்டை பெற்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அவர் தொடர்ந்தும் விமானத்தில் பயணிப்பதற்கு மறுப்பு தெரிவித்த தனியார் விமான நிறுவனம், அவரது பயணக் கட்டணத்தின் ஒரு பகுதியை மீளச் செலுத்தியுள்ளது.

இதனையடுத்து பாதுகாப்புப் பிரிவினர் விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், அவர் மீது எவ்வித முறைப்பாடுகளும் இல்லாதிருந்தமையினால் அவர் இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!