‘யுத்த காலத்தின்போதே கிழக்கில் ஜிஹாத் குழுவினர் செயற்பட்டனர்’ பொலிஸ் அதிகாரி சாட்சியம்

0 1,018

                                                                                                                                (எம்.எப்.எம்.பஸீர்)

                                  வைப்பகப் படம்

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் கிழக்கு மாகாணத்தில் ‘ஜிஹாத்’ குழு எனும் பெயரில் கடும்போக்கு இஸ்லாமிய குழு இயங்கியதாக, கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளர் பிரதான பொலிஸ் பரிசோதகர் திலீப் திவாகர டி சில்வா நேற்று (08) சாட்சியமளித்தார்.

குறித்த குழுவினர் ஆயுதம் ஏந்தி இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரைத் தாக்காத போதும், அவர்களது நிலைப்பாடுகளும் நடவடிக்கைகளும் சாதாரண முஸ்லிம்களிடமிருந்து வேறுபட்டதாக காணப்பட்டது எனவும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையபப்டுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் நேற்று இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து சாட்சியமளித்த அவர், ‘ நான் 1997 முதல் 2007 வரையிலான 10 வருடங்கள் வடக்கு, மற்றும் கிழக்கிலேயே சேவையாற்றினேன். குறிப்பாக, கிழக்கில் 4 வருடங்களுக்கு மேல் சேவையாற்றியுள்ளேன். 1997 ஆம் ஆண்டு முதல் கிழக்கில் நான் சேவையாற்றிய சமயம் அங்கு ஜிஹாத் எனும் பெயர் தாங்கிய கடும்போக்கு அமைப்பின் செயற்பாடுகள் இருந்தன. அவர்களுக்கும் அரசியல் பலம் இருந்தது என்பதே எனது நிலைப்பாடு. அவர்கள் ஆயுதம் ஏந்தி பொலிஸாரையோ இராணுவத்தினரையோ தாக்காத போதும், அவர்களது நடவடிக்கைகள் சாதாரண முஸ்லிம் மக்களில் இருந்து வித்தியாசமானதாக இருந்தது.

ஹர்த்தால் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் இருந்து தேர்தல்களின்போது மோதிக்கொள்வது, தமிழ்த் தரப்புடன் அவ்வப்போது மோதல்களில் ஈடுபடுவது போன்ற செயற்பாடுகள் ஊடாக அவர்களது கடுமையான நிலைப்பாடுகள் வெளிப்பட்டன.’ என சாட்சியமளித்தார்.

‘ உண்மையில் இந்தத் தொடர் தற்கொலை தாக்குதல்களைத் திடீரென சேர்ந்து நடத்தியதாக தெரியவில்லை. அதற்கு முன்னர் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மாவனெல்லையில் புத்தர் சிலை உடைப்பு வனாத்தவில்லுவில் வெடிபொருட்கள் மீட்பு என அனைத்தும் இந்த குழுவுடன் தொடர்புடைய சம்பவங்கள். அது தொடர்பில் விசாரித்தவர்கள் காத்திரமாக செயற்பட்டு இவர்களைக் கைது செய்திருக்க முடியும்.

அப்படி செய்திருந்தால் இந்தத் தாக்குதலே நடந்திருக்காது. பொறுப்பான பிரிவினரின் பொறுப்பற்ற செயற்பாடுகளே இந்தத் தற்கொலை தாக்குதல்களுக்கு வழி வகுத்ததன என்பது எனது நிலைப்பாடு’ என சாட்சியமளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!