சிப்லி பாரூக் மூலம் என்னிடம் ஒரு கோடி ரூபா கப்பம் பெற முயன்ற நபர்! -அமைச்சர் ஹக்கீம்

0 795

                                  (இராஜதுரை ஹஷான்)
உண்மைக்குப் புறம்பான தவறான செய்திகளை வெளியிடும் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கையை முன்னெடுப்பேன். பயங்கரவாதி ஸஹ்ரானுடன் என்னைத் தொடர்புப்படுத்திய குற்றச்சாட்டின் பின்னனியில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம். எல். ஏ. எம்.ஹிஸ்புல்லாவும் பொதுஜன பெரமுனவினருமே உள்ளனர் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் ஊடகங்களின் ஊடாக  ஒரு நபர் தவறான சேறுபூசும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுத்து வந்தார். இவ்வாறான செய்திகளுக்கு ஒரு தனியார் தொலைக்காட்சி மாத்திரமே முன்னுரிமை கொடுத்தது. இவ்விடயம் தொடர்பில் குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தில் பிரதானியிடம் தொடர்பு கொண்டு கருத்துரைத்தேன்.

அரசியல்வாதிகள் தொடர்பில் ஒரு செய்தி கிடைக்கப் பெறும்போது அதனை பகிரங்கப்படுத்துவதற்கு முன்னர் அவர் தரப்பு நிலைப்பாட்டையும் எடுத்துரைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். ஆகவே என் பக்க நியாயத்தைக் குறிப்பிட பல முறை கோரியிருந்தபோதும் அந்த நிறுவனம் எவ்வித பதிலையும் தரவில்லை. ஒருதலைப்பட்சமான செய்திகளை மாத்திரமே வெளியிட்டது.

தவறான பிரசாரங்களை ஊடங்கள் வாயிலாக முன்னெடுத்த  குறித்த நபரின் நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய தேவை காணப்பட்டது. இந்த நபர் ஒருமுறை என்னை எனது காரியாலயத்திலும் வந்து சந்தித்து சென்றுள்ளார்.

பணத்துக்காகவே இவ்வாறான போலி செய்திகளை ஒரு தரப்பினருக்கு ஆதாரவாக முன்னெடுத்து செல்கின்றார் என்பதனை அறிந்து கொள்ள முடிந்தது.

குறித்த நபர் என்னிடம் நேரடியாக கப்பம் கோர முடியாததால் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிப்லி பாரூக்குடன்  தொலை பேசியில் தொடர்பு கொண்டு அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை சேறு பூசும் விதத்திலான செய்திகளை பரப்பி விடுமாறு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவும்,பொதுஜன பெரமுனவின் தரப்பினரும் குறிப்பிட்டதாக வும். அதற்கு தனக்கு உரிய பணம் கிடைக்கப் பெறவில்லை என்று ம் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே நீங்கள் எனக்கு 1கோடி ரூபாய கொடுத்தால் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றமற்றவர் என்பதை ஊடகங்கள் வாயிலாக 200 சதவீதம் நிரூபிப்பேன் என்று குறிப்பிட்டார். இவர் தொலை பேசியில் உரையாடிய அனைத்து விடயங்களும் ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக ஊடகங்களை தவறான முறையில் பாவித்துக் கொள்ளும் இவ்வாறான நபர்களுக்கு ஊடகங்கள் ஆதரவாக செயற்படுவது ஊடக தர்மத்துக்கு முரணானதாகும்.

எவ்விதமான உரிய ஆதாரங்களும் இன்றி தவறான செய்திகளுக்கு முன்னுரிமை வழங்கிய குறித்த தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக நிச்சயம் சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன். தற்போது கிடைக்கப் பெற்றுள்ள இந்த குரல் பதிவு ஆதாரங்களை கொண்டு அதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கையை மேற்கொள்வேன்.

பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவாகவே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் செயற்படுகின்றார். வங்குரோத்து அரசியல் செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!