அயோத்தி வழக்கு: ஷியா வக்பு சபையின் மனுவை தள்ளுபடி செய்த இந்திய உச்ச நீதிமன்றம்

0 1,204

அயோத்திக்கு உரிமை கோரி ஷியா வக்பு சபை தாக்கல் செய்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (09) தள்ளுபடி செய்தது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உர் நீதிமன்றம் அந்த நிலத்தை சுன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது

இதனை எதிர்த்து பல அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்தது.

கடந்த ஆகஸ்டு 6-ந் தேதி முதல் இந்த வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வு தினசரி விசாரித்து வந்தது. 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணை கடந்த மாதம் 16-ந் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் அயோத்தி நிலம் வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது, நிலத்துக்கு உரிமை கோரி ஷியா வக்பு வாரியம் தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

‘நீதிமன்றம் நடுநிலையை காக்கும் பொறுப்பில் இருக்கிறது. ஒரு மத நம்பிக்கை பிற மத நம்பிக்கையை தடுப்பதாக இருக்கக்கூடாது. மதங்களில் இருக்கும் நம்பிக்கையை உச்ச நீதிமன்றம் மதிக்கிறது. மதச்சார்பின்மையே அரசியல் சாசனத்தின் அடிப்படை பண்பு.

அமைதியை காக்கும் வகையிலும் பாதுகாப்பை பராமரிக்கும் வகையிலும் அயோத்தி தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

தீர்ப்பின் சாரம்சம்

 மதச்சார்பின்மையே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை. அதன்படியே உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில், பாபர் மசூதி வெற்றிடத்தில் கட்டப்படவில்லை.பாபர் மசூதிக்கு கீழே கண்டறியப்பட்ட கட்டுமானங்கள் இஸ்லாமியர்களின் கட்டுமானங்கள் அல்ல. தொல்லியல் துறை வழங்கியுள்ள ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை.

சர்ச்சைக்குரிய இடம் இரு மதத்தினராலும் தங்கள் நம்பிக்கையை வெளிபடுத்தக்கூடிய இடமாக இருந்துள்ளது. அயோத்தி ராமர் பிறந்த இடம் என இந்து மக்கள் நம்புகின்றனர் என்பது மறுக்க இயலாதது. இந்துக்களின் நம்பிக்கையை குலைக்க முடியாது. ஆனால், நிலத்தின் உரிமையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் கோர முடியாது.

அந்த இடத்தினை பாபர் மசூதி என முஸ்லிம்கள் அழைக்கின்றனர். பாபர் மசூதி இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

எதனையும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் முடிவெடுத்து விட முடியாது. நிர்மோகி அகாரா வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என அதனை தள்ளுபடி செய்துள்ளது.

அமைதியை காக்கவும், பாதுகாப்பினை பராமரிக்கவும் ஏற்ற வகையில் நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று கொள்ள வேண்டும். நிலம் 3 ஆக பிரித்து கொடுத்தது தவறு. வக்பு சபை ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் த வழங்க மத்திய அரசு, உத்தர பிரதேச அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து அலகாபாத் நீதிமன்றம் வழங்கியது தவறு. கடந்த 1857ம் ஆண்டுக்கு முன் சர்ச்சைக்குரிய இடத்தில், உரிமைக்கான ஆவணங்களை நிரூபிக்க முஸ்லீம் அமைப்புகள் தவறி விட்டன. அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் என  உச்ச நீதிமன்றம்  தீர்ப்பில் அறிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்டுவதற்கு 3 மாதங்களில் மத்திய அரசு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்காக தகுந்த இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலத்தை வழங்கவும் நீதிபதிகள் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டவும்  உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. (நன்றி தமிழ்த் தந்தி, மாலை மலர்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!