500 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி அலி சப்ரிக்கு எதிராக வழக்கு!

0 1,131

                                                                                                                                (எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கு எதிராக 500 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகத் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் கலந்து கொண்ட அலி சப்ரி , ஹரின் பெர்னாண்டோவும் அவரது தந்தையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்களை மறைத்து பொது மக்கள் 300 பேர் உயிரிழக்கக் காரணமாகினார் என குற்றம் சுமத்தியிருந்த நிலையில் இதற்கு எதிராகவே அவர் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :

கோட்டாபய ராஜபக்க்ஷவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பில் கலவரமடைய வேண்டிய தேவையோ அல்லது அதைப் பற்றி தேர்தல் பிரசார மேடைகளில் பேச வேண்டிய தேவையோ சஜித் பிரேமதாசவுக்குக் கிடையாது. காரணம் தேர்தலில் கோட்டாபய ராஜபக்க்ஷவே எம்மால் இலகுவாக தோல்வியடையச் செய்யக் கூடியவராவார்.

இவ்வாறு சகோதரரின் பின்னால் செல்லும் கோட்டாபய நிச்சயம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். எனினும் அவரது அமெரிக்க குடியுரிமை தொடர்பில் மீண்டும் ஒரு பிரச்சினை ஏற்பட்டமையினாலேயே நான் எனது டுவிட்டர் பதிவில் அது குறித்து பதிவு ஒன்றை இட்டிருந்தேன். எனினும் அது இப்போது பூதாகரமான பிரச்சினையாகியுள்ளது.

அமெரிக்கக் குடியுரிமையை நீக்கிக் கொண்டவர்கள் பட்டியிடலில் கோட்டாபய ராஜபக்க்ஷவின் பெயர் ஏன் உள்ளடக்கப்படவில்லை என்பதே தற்போது காணப்படும் பாரிய பிரச்சினையாகும். அமெரிக்க தூதரகம் ஏன் இது பற்றி எந்த கருத்தையும் கூறாமலிருக்கிறது ? கோட்டாபய ராஜபக்க்ஷ அமெரிக்க பிரதிநிதியா ? அல்லது அமெரிக்காவின் துப்பறிவாளரா? சோபா ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்கா கோட்டாபயவை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறதா? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!