ஏழரை இலட்சம் மேலதிக வாக்குகளால் சஜித் வெல்வார்! -பைசல் காசிம்

0 408

சஜித் பிரேமதாசாவை நாம் ஏழரை லட்சம் மேலதிக வாக்குகளால் வெல்ல வைப்போம் என்றும் அதில் தமிழ்-முஸ்லிம் மக்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்றும் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறியுள்ளார்.

பொத்துவில்லில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

இதுவரை கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில் வடக்கு-கிழக்கு தமிழ்,முஸ்லிம் மக்கள் 65 சத வீதமானவர்களே வாக்களிப்பதற்குத் தயாராகி உள்ளனர்.ஆனால், 90 சத வீதமானவர்கள் வாக்களிக்க வேண்டும்.
இது சமூகத்துக்கு முக்கியமான தேர்தல்.எமது சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேர்தல்.இதில் அஜாக்கிரதையாக இருந்துவிட வேண்டாம்.

சிலர் ஜேவிபிக்கு வாக்களிக்குமாறு கூறுகின்றனர்.ஆனால்,ஜேவிபியினர்கூட மறைமுகமாக சஜித்தையே ஆதரிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்துக்கு வந்த சுனில் ஹந்துன்நெத்தியைச் சந்தித்துப் பேசினேன்.சஜித்தின் வாக்குகளை தமிழ்-முஸ்லிம்களிடமிருந்து பறிப்பது நோக்கமல்ல என்றும் இந்த மக்களிடம் இருந்து கோட்டாவுக்குச் செல்லவுள்ள வாக்குகளையே நாம் குறி வைத்துள்ளோம் என்றும் அவர் என்னிடம் கூறினார்.

அப்படியென்றால் அவர்களும் கோட்டா வருவதை விரும்பவில்லை.சஜித்தையே விரும்புகின்றனர்.நிலைமை இப்படி இருக்கும்போது நாம் ஜேவிபிக்கு வாக்களிப்பது முட்டாள்தனம்.அவர்கள் வெல்லப்போவதில்லை.ஜேவிபியும் எமக்கே ஆதரவு வழங்குகிறார்கள்.

அதுமட்டுமா? சந்திரிகா சஜித்துக்கு ஆதரவு வழங்கியதால் சஜித்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் சில வேட்பாளர்களும் இரண்டாவது விருப்ப வாக்கை சஜித்துக்கு வழங்குமாறே மக்களிடம் கூறவுள்ளனர்.இதனால் எமது வெற்றி மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இருந்தாலும்,சஜித்தை நாங்கள் ஏழரை லட்சம் வாக்குகளால் வெல்ல வைப்பதற்காகப் போராடுகிறோம்.அது நிச்சயம் நடக்கும்.இதில் எமது பங்களிப்பு மிகவும் அதிகமாக இருக்க வேண்டும்.அதுதான் எமக்கு ஆரசியல்ரீதியாகப் பல நன்மைகளை பெற்றுத் தரும்.

அவர் ஜனாதிபதியானால் என்னவெல்லாம் செய்வார் என்று கூறியுள்ளார்.அவரை வெற்றிபெற வைத்தால்தான் எமக்குத் தேவையான அபிவிருத்திகளை செய்ய முடியும்.பல வேலைகள் குறையாக நிற்கின்றன.சஜித்தை வெல்ல வைத்து ஆட்சியை எமது கையில் எடுத்தால்தான் எமது அபிவிருத்திகளை துரிதமாக முன்னெடுக்க முடியும்.
பல தேவைகளை நிறைவேற்றித் தருவதாக சஜித் எங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார்.அவரை நாங்கள் நம்புகிறோம்.அவர் சொல்வதைச் செய்யும் செயல் வீரன்.இந்த ஆட்சியில் அவருக்குக் கிடைத்த அமைச்சை வைத்துக்கொண்டு அவர் அதிகமான வேலைகளை செய்திருக்கிறார்.

எல்லா கிராமங்களிலும் ஏழை மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுத்திருக்கிறார்.எங்களுக்கும் அவ்வாறான தேவைகள் இருக்கின்றன.அவற்றையெல்லாம் நிறைவேற்றித் தருவதாக அவர் கூறி இருக்கின்றார்.
ஆகவே,எமது பாதுகாப்புக்காகவும் அபிவிருத்திக்காகவும் சஜித்தை நாம் வெல்ல வைக்க வேண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!