தேரர் வேடமிட்டு விஹாரையில் திருடியவரும், சாரதியும் மீண்டும் விளக்கமறியலில்!வயது, உடல் அமைப்பை ஒத்த 8 இளம் பிக்குகளுடன் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்ட பிரதான சந்தேக நபரை அடையாளம் காட்டிய சாட்சியாளர்கள்!

0 1,106

(மதுரங்குளி நிருபர்)

தேரர் வேடத்தில் கொபேஹேன விஹாரைஒன்றிலிருந்த பொருட்களைத் திருடிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப் பட்டிருந்த ஒருவரும் அவரது, சாரதியும் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டப் பட்டதனையடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நிக்கவெரட்டி பதில் நீதிவான் மஹிந்த கே. ஹேரத் உத்தரவிட்டுள்ளார்.

சட்டத்தில் குறிப்பிட்டதைப் போன்று வயது மற்றும் உடல் அமைப்பை ஒத்த மேலும் 8 இளம் தேரர்களும் சந்தேக நபர்களுடன் அடையாள அணிவகுப்பில் ஈடுபடுத்தப்பட்டதோடு, இரண்டு சாட்சியாளர்களால் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டதனையடுத்தே அவர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரெட்டம்ப பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரும் பன்னிப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களாவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பௌத்த தேரருக்கான பிக்கு ஆடை அணிந்து கொண்டு கார் ஒன்றில் சாரதியுடன் குறித்த விஹாரைக்கு திருட வந்தவர்களை கண்டதாகக் கூறப்படும் சாட்சியாளர்களாக அந்த விஹாரையின் உதவியாளரும் மற்றொருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி சந்தேக நபர்களை அடையாளம் காட்டினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தேரர் வேடமிட்ட சந்தேக நபர் தனக்கு தங்குவதற்கு பௌத்த விஹாரையில் இடம் தேவை எனப் பத்திரிகை விளம்பரம் செய்ததையடுத்து குறித்த விஹாரைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்,
இந்த நிலையில் அந்த விஹாரையின் விஹாராதிபதி அங்கு இல்லாத நிலையில் விஹாரையின் உதவியாளரைக் கடைக்கு அனுப்பிவிட்டு அங்கிருந்த இரண்டு உண்டியல்கள், மற்றும் பெறுமதியான பொருட்களையும் தான் வந்த காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து குறித்த சந்தேக நபர் தப்பிச் சென்ற போது கொபேஹேன பொலிஸார் அவர்களை நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து பொருட்களுடன் கைது செய்திருந்தனர்.

இவர்கள் இவ்வாறு தேரர் வேடமிட்டு இன்னும் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கொபேஹேன பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!