ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 33 வேட்பாளர்களின்  கட்டுப்பணம் அரசுடைமையாக்கப்பட்டது

0 624

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில் 33 பேர் கட்டுப்பணத்தை இழந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் செல்லுபடியாகும் வாக்குகளில் 12. 5 சதவீதத்தினை பெற்றுக் கொள்ள தவறியதன் காரணமாக இந்த 33 வேட்பாளர்களும் தமது கட்டுபணத்தை இழந்துள்ள நிலையில் அவர்களால் செலுத்தப்பட்ட கட்டுப்பணம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது என அவர் ‍தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர்களான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டாபய ராஜபக்ஷ 52.25 சதவீத வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் சஜித் பிரேமதாச 41. 99 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்த நிலையில் அவ்விருவரும் மாத்திரமே செல்லுபடியாகும் வாக்குகளில் 12. 5 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தனர்.

இந்தத் தேர்தலில் மூன்றாவதாக அதிகபடியான வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரான அநுரகுமார திசாநாயக்க, மொத்த செல்லுபடியான வாக்குகளில் 3.16 சதவீதத்தை மாத்திரம் பெற்றுள்ளதால் அவரும் கட்டுப்பணத்தை இழந்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக, அங்கீகரிக்க கட்சியொன்றின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 50 ஆயிரம் ரூபாவை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும். அதேபோல, சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் 75 ஆயிரம் ரூபாவை செலுத்த வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!