எயார் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் அடுத்த வருடம் விற்பனை -இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
எயார் இந்தியா, பாரத் பெட்ரோலியம் கோர்பரேஷன் நிறுவனங்களை விற்று 1 லட்சம் கோடி ரூபா நிதி திரட்ட இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், நஷ்டத்தில் இயங்கி வருகிற பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் முடிவில் இந்திய அரசு இருக்கிறது.
அந்த வகையில் எயார் இந்தியா விமான நிறுவனத்தையும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தையும் விற்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, ‘இவ்விரு நிறுவனங்களையும் 2020 மார்ச் மாதத்துக்குள் விற்பனை செய்து முடித்து விட முடியும் என கருதுகிறோம்’ என குறிப்பிட்டார்.
எயார் இந்தியா நிறுவனத்தைப் பொறுத்தமட்டில், தற்போது அந்த நிறுவனத்தை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகிற சாதகமான சூழ்நிலை உள்ளது எனவும் அவர் கூறினார்.
இந்த இரு நிறுவனங்களையும் விற்று ரூபா 1 லட்சம் கோடி நிதி திரட்டி விட முடியும் என இந்திய மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
‘பொருளாதார நெருக்கடிக்கு முடிவு கட்டுகிற வகையில், அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
பல துறைகள் இப்போது நெருக்கடியில் இருந்து மீண்டு வருகின்றன’ என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சில குறிப்பிட்ட துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டிருப்பதையும், பொருளாதார மந்த நிலையை மீட்டெடுக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி, மீண்டும் சரக்கு, சேவை வரி வசூல் சூடு பிடிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பொருளாதார வளர்ச்சிவீதம்) 5 சதவீதத்துக்கும் கீழாக உள்ளதாக தர நிர்ணயம் செய்கிற பல்வேறு நிறுவனங்கள் கூறினாலும்கூட, இந்திய பொருளாதாரம் அதில் இருந்து மீட்டெடுக்கப்பட்டு சூடு பிடிக்கத்தொடங்கும் என நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.