ஜேர்மன் முன்னாள் ஜனாதிபதி ரிச்சர்ட் வொன் வேய்ஸ்சாக்கரின் மகன் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்!
ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி ரிச்சர்ட் வொன் வேய்ஸ்சாக்கரின் மகனான டாக்டர் பிரிட்ஸ் வொன் வேய்சாக்கர் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார்.

பேர்லின் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
ரிச்சர்ட் வொன் வேய்ஸ்சாக்கர் 1984 முதல் 1990 ஆம் ஆண்டு மேற்கு ஜேர்மனியின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.
கிழக்கு மேற்கு ஜேர்மனிகள் 1990 ஆம் ஆண்டு இணைந்த பின்னர், ஒன்றிணைந்த ஜேர்மனியின் ஜனாதிபதியாக 1994 ஆம் ஆண்டுவரை அவர் பதவி வகித்தார். 2015 ஆம் ஆண்டு தனது 94 ஆவது வயதில் அவர் காலமானார்.

ரிச்சர்ட் வொன் வேய்ஸ்சாக்கரின் மகனான பிரிட்ஸ் வொன் வேய்சாக்கர் (59) ஒரு மருத்துவர் ஆவார். ஈரல் நோய்கள் தொடர்பாக உரையாற்றிக்கொண்டிருந்தபோது அவர் கத்தியால் குத்தப்பட்டார். மருத்துவர்கள் அவரை காப்பாற்ற முயன்றபோதிலும் ஸ்தலத்திலேயே அவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.