தேசிய ஒலிம்பிக் பயிற்சி செயலமர்வு: பண்டாரவளையில் இன்று ஆரம்பம்

0 121

தேசிய ஒலிம்பிக குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 16ஆவது தேசிய ஒலிம்பிக் பயிற்சி அமர்வு பண்டாரவளை, தியத்தலாவையில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

சுற்றாடலை நிலையாக வைத்திருப்பதில் ஒலிம்பிக் பெறுமதிகளின் பங்கு என்ற தொனிப்பொருளில் இவ் வருட தேசிய ஒலிம்பிக் பயிற்சி அமர்வு நடத்ப்படுகின்றது.

ஒலிம்பிக் கல்வித் திட்டத்தின் ஓர் அங்கமாக இன்று முதல் எதிர்வரும் 25ஆம் திகதிவரை தியத்தலாவை இராணுவ பயிற்சியகத்தில் நடைபெறவுள்ள தேசிய ஒலிம்பிக் பயிற்சி அமர்வில் தெற்காசிய நாடுகளின் ஒலிம்பிக் பிரதிநிதிகளும் பங்குபற்றுகின்றனர்.

ஒலிம்பிக்கின் மூன்று பெறுமதிகளான சிறப்பு, நட்புறவு, கண்ணியம் ஆகிய விடயங்களை இலங்கை இளையோர் மத்தியில் கொண்டு செல்லும் கல்வித் திட்டத்தை கடந்த மூன்று தசாப்தங்களாக தேசிய ஒலிம்பிக் குழு தொடர்ச்சியாக நடத்திவருகின்றது.

ஒலிம்பிக் பயிற்சி அமர்வில் பங்குபற்றுபவர்கள் மத்தியில் மலையகத்தின் சுற்றுச் சூழல்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த அமர்வு பண்டாரவளையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலமர்வு வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு இலங்கை இராணுவம் தனது பூரண ஓத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளது.இவ் வருடம் மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரதிநிதிகளும் பங்குபற்றுகின்றமை சிறப்பம்சமாகும்.

இலங்கை பல்கலைக்கழகங்கள், விளையாட்டுத்துறை சங்கங்கள், சம்மேளனங்கள், தெற்காசிய ஒலிம்பிக் குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இம்முறை  பங்குபற்றுவதாக தேசிய ஒலிம்பிக் குழு தெரிவித்தது.

இன்று காலை நடைபெறவுள்ள ஆரம்ப வைபத்தில் இராணுவத் தளபதி எச். ஷிவேந்த்ர சில்வா பங்குபற்றுவதுடன், தேசிய ஒலிம்பிக் பயிற்சி அமர்வில் இராணுவத் தளபதி ஒருவர் கலந்துகொள்வது இதுவே முதல் தடவையாகும். (என்.வீ.ஏ.)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!