இலங்கை டென்னிஸ் அணியில் தினேஷ்காந்தன், சுரேன், நம்பிக்கை நட்சத்திரங்கள் அஞ்சலிக்கா, அனிக்கா
(நெவில் அன்தனி)
நேபாளத்தின் கத்மண்டுவிலும் பொக்காராவிலும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் இலங்கை டென்னிஸ் அணியில் சிரேஷ்ட வீரர் தினேஷ்காந்தன் தங்கராஜா, இளம் வீரர் சுரேன் பாலச்சந்திரன் ஆகியோர் அடங்கலாக 12 வீர, வீராங்கனைகள் இடம்பெறுகின்றனர்.
டேவிஸ் கிண்ண வீரரும் ஐந்து தடவைகள் இலங்கையின் முன்னாள் சம்பியனுமான தினேஷ்காந்தன் இம்முறை பதக்கம் ஒன்றை வெல்லக்கூடியவராக நம்பப்படுகின்றார்.
தெற்;காசிய விளையாட்டு விழா வரலாற்றில் 21 வருடங்களின் பின்னர் 2016இல் டென்னிஸ் போட்டிகளில் முதல் தடவையாக பங்குபற்றிய இலங்கை 3 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது. அப் போட்டியில் இருபாலாரிலும் இந்தியாவின் ஆதிக்கம் வெளிப்பட்டது.
2016 போட்டிகளில் பங்குபற்றிய தினேஷ்காந்தன், ஷாமல் திசாநாயக்க ஆகியோருடன் இரட்டையர் போட்டிகளில் பிரகாசிக்கும் யசித்த டி சில்வா, சன்கா அத்துகோரள மற்றும் வளர்ந்து வரும் இளம் வீரர்களான சத்துரிய நிலவீர, சுரேன் பாலச்சந்திரன் ஆகியோர் ஆடவர் அணியில் இடம்பெறுகின்றனர்.
மகளிர் அணியில் நடப்பு தேசிய சம்பியன் அஞ்சலிக்கா குரேரா (நீர்கொழும்பு ஆவே மரியா கல்லூரி), முன்னாள் சம்பியனும் இளம் அனுபவசாலியுமான அனிக்கா செனவிரட்ன, இவரது இளைய சகோதரி அலனா செனவிரட்ன, ருஷிக்கா விஜேசூரிய, இரட்டையர் ஜோடியான சவினி ஜயசூரிய, ஜனலி மனம்பெரி ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
இவர்களில் அஞ்சலிக்காவும் அனிக்காவும் பதக்கம் வெல்லக்கூடியவர்கள் என நம்பப்படுகின்றது.2016இல் போன்றே இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு இவ் வருடமும் இந்திய வீர, வீராங்கனைகளே கடும் சவாலாக விளங்கவுள்ளனர்.