சேர்க்கஸ் கண்காட்சியின் போது 36 அடி உயரத்திலிருந்து வீழ்ந்த சேர்க்கஸ் கலைஞர்
சேர்க்கஸ் கலைஞரான யுவதியொருவர், சாகசமொன்றில் ஈடுபட்டிருந்தபோது 36 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானார். ஜெக்கி லூசி ஆம்ஸ்ட்ரோங் என்பவரே இவ்வாறு விபத்துக்குள்ளானார்.
பிரிட்டனின் தலைநகர் லண்டனிலுள்ள ஹைட்பார்க் விண்ட்டர் வொண்டர்லேண்டில் நேற்றுமுன்தினம்இச்சம்பவம் இடம்பெற்றது.
அங்கு ஸிப்போஸ் கிறிஸ்மஸ் சேர்க்கஸ் கண்காட்சி நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது.
இதன்போது, சேர்க்கஸ் கலைஞர் ஜெக்கி லூசி ஆம்ஸ்ட்ரோங் சுமார் 36 அடி உயரத்திலிருந்து திடீரென கீழே வீழ்ந்தார்.
சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது ஜெக்கி ஆம்ஸ்ட்ரோங்கின் கைப்பிடி நழுவியதால் இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்விபத்தையடுத்து அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
அத்துடன், நேற்றுமுன்தினம் மாலை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டு, பார்வையாளர்கள் வெளியேறுமாறு கோரப்பட்டனர். அவர்களின் நுழைவுச்சீட்டுகளை மற்றொரு நிகழ்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
35 வயதான ஜெக்கி லூசி ஆம்ஸ்ட்ரோங் ஒரு குழந்தையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. ஸிப்போஸ் சேர்க்கஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், ‘ஜெக்கி லூசி ஆம்ஸ்ட்ரோங் பிரிட்டனைச் சேர்ந்த கலைஞர்.
அவர் சுமார் 10 வருட அனுபவமுடைய சேர்க்கஸ் கலைஞர். இக்குழுவின் அதிக அனுபவம் கொண்ட கலைஞர்களில் ஒருவர்’ என்றார்.மேற்படி சேர்க்கஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் மார்ட்டின் பர்ட்டன் கூறுகையில், ‘ஜெக்கி அனுபவம் மிகுந்த கலைஞர்.
அவர் எமது சேர்க்கஸ் குடும்பத்தின் மிகப் பெறுமதியான ஒருவர். அவருக்கு காயம் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எமக்கு உடனடியாகத் தகவல்கள் கிடைக்கவில்லை.
இதனால் வேறு கருத்துகளை எம்மால் தெரிவிக்க இயலாது’ என்றார்.