தன்னுடன் வருவதற்கு மறுத்த காதலனுக்கு எதிராக பொய்யான பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய காதலி!

குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு

0 757

(ரெ.கிறிஷ்ணகாந்)

தன்னுடைய விருப்பமின்றி தனது காதலன் தன்னை பலவந்தமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் பொய்யாக முறைப்பாடு செய்த யுவதியொருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு, பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு நுகேகொடை மேலதிக நீதிவான் எம்.யு.கே. பெல்பொல உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மேற்படி யுவதியினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, அவரது காதலன் எனக்கூறப்படும் நபரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரித்ததாகவும், அதற்கமைய, தொலைபேசி அழைப்பொன்றின் ஊடாகவே இருவருக்குள் பழக்கம் ஏற்பட்ட பின்னர் இருவரும் காதல் வயப்பட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும் பொலிஸார் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

தாம் இவ்வாறு காதலர்களாக இருந்த காலப்பகுதியில், குறித்த யுவதி தன்னிடம், ‘நாம் இருவரும் யாருக்கும் தெரியாமல் ஓடிப்போவோம்’ என்ற யோசணை முன்வைத்ததாகவும், தனக்கு விருப்பம் இன்மையினால் தான் அதனை நிராகரித்ததால் அவர் கோபமடைந்து தனக்கு எதிராக பொய்யான முறைப்பாடு அளித்துள்ளதாகவும், தன்னால் எவ்வித பாலியல் துஷ்பிரயோகமும் மேற்கொள்ளப்படவில்லை என்று குறித்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த வாக்குமூலத்துக்கமைய, பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட முறைப்பாட்டாளரான யுவதியை மருத்துவ பரிசோதனைகளுக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் பொலிஸார் அனுப்பிவைத்துள்ளனர்.

அதன்போது, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கமைய குறித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியிருக்கவில்லை என சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை சமர்ப்பித்ததாக பொலிஸார் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

பொரலஸ்கமுவ பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட நீதிவான், பொலிஸார் மற்றும் நீதிமன்றை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டில் குறித்த யுவதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!