சீரற்ற கால நிலை நாளை இரவு முதல் அதிகரிக்கும்!

0 297

                                                                                                                             (ரெ.கிறிஷ்ணகாந்)
நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலையினால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் காரணமாக கடந்த 30 ஆம் திகதிமுதல் நேற்றுமாலை வரை 1609 குடும்பங்களைச் சேர்ந்த 5904 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் காலநிலை சீர்கேட்டினால் இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெயர்ந்த, 242 குடும்பங்களைச் சேர்ந்த 915 பேர் 14 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மண்சரிவு மற்றும் கடும் மழையின் காரணமாக 3 வீடுகள் முழுமையாகவும், 169 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகள் தொடர்பில் தமது பிரதேசத்துக்கு பொறுப்பான கிராம சேவகரை தொடர்புகொண்டு, நஷ்டஈடு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அனர்த்த முகாத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நிலவும் மழையுடனான காலநிலை நாளை (03) இரவு முதல் (விசேடமாக 4 மற்றும் 5 ஆம் திகதிகளில்) அதிகரிக்கும் எனவும் ஆங்காங்கே 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான கடுமையான மழை ஏற்படக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!