இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குங்கள்! -ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு

0 165

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்த நிலைமைகளின்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களது நலன்புரி தேவைகளை நிறைவேற்றுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, நிலவும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக ஏற்படக்கூடிய மண்சரிவு, மண்மேடுகள்,   கற்பாறைகள் சரிந்து வீழ்தல் போன்ற  அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியன ஒன்றிணைந்து அனர்த்த நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கும் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

 பொதுமக்களுக்கான நலன்புரி தேவைகளை நிறைவேற்றுவதற்கான  துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு சுற்றுநிரூபத்தின் ஊடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வனைத்து செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் மீளாய்வு ஆகியன  பிரதமரின் தலைமையில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலையால் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களை குறித்த பிரதேசங்களிலிருந்து மீட்பதற்காகவும் , அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்காகவும் விசேட வேலைத்திட்டத்தை  முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை பிரதமரின் தலைமையில் , அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்,  இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் பாதுகாப்பு சபை பிரதானிகள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடல் தொடர்பில் பிரதமர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

சீரற்ற காலநிலையால் இது வரையில் 9 மாகாணங்கள் கூடுதலாக அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளன. இவற்றில் மட்டக்களப்பு, நுவரெலியா, அம்பாறை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களே அதிகளவு பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளன.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை குறித்த பிரதேசங்களிலிருந்து மீட்பதற்காகவும் , அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்காகவும் விஷேட வேலைத்திட்டத்தினை முன்னெடுக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு பிரதமரால் பணிப்புரை விடுக்கப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் உடல் நலம் பற்றி கவனத்தில் கொள்ளுமாறும், அவர்களுக்கு உலர் உணவுகளை வழங்குமாறும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!