சீரற்ற கால நிலை அனர்த்தங்களினால் 5904 பேர் பாதிப்பு: 169 வீடுகள் சேதம்!

0 101

(ரெ.கிறிஷ்ணகாந்)

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலையினால் ஏற்பட்ட இயற்கை  அனர்த்தங்களின் காரணமாக கடந்த 30 ஆம் திகதிமுதல் நேற்றுமாலை வரை 1609 குடும்பங்களைச் சேர்ந்த 5904 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த சீரற்ற காலநிலையினால் நேற்றுமுன்தினம் வலப்பனை பகுதியில் ஏற்பட்ட 3 மரணங்களைத் தவிர வேறு எந்த மரணங்களும் ஏற்படவில்லை என்றும்,  5 ஐவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன், வலப்பனை மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்த சிறுவனைத் தேடும் பணிகள் நேற்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மேலும் காலநிலை சீர்கேட்டினால் இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெயர்ந்த,  242 குடும்பங்களைச் சேர்ந்த 915 பேர் 14 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்குவதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் நிவாரண சேவை மத்திய நிலையத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மண்சரிவு மற்றும் கடும் மழையின் காரணமாக 3 வீடுகள் முழுமையாகவும், 169 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகள் தொடர்பில் தமது பிரதேசத்துக்கு பொறுப்பான கிராம சேவகரை தொடர்புகொண்டு, நஷ்டஈடு பெறுவதற்கான நடவடிக்கைகளை  மேற்கொள்ள முடியும் என அனர்த்த முகாத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தின் சூரியன்கட்டுவன் வாவி மற்றும் சமன்குளம் ஆகிய வாவிகள் சேதமடைந்தமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ள நிலையில் அதனை சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இராஜாங்கனை, உடவளவ, உல்ஹிட்டிவெவ, அங்கமுவ, தப்போவ, தெதுறுஓயா, இப்பன்கட்டுவ, இங்கினிமிட்டிய  மற்றும் நாச்சதூவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், கண்டி, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மண்சரிவு தொடர்பில் அப்பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

இதனைவிட, வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று இரவு முதல் (விசேடமாக 4 மற்றும் 5 ஆம் திகதிகளில்) அதிகரிக்கும் எனவும் ஆங்காங்கே 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான கடுமையான மழை ஏற்படக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் சி;வப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, திடீர் அனர்த்தங்கள் தொடர்பில் 117 என்ற துரித எண்ணை அழைத்து விபரங்களை தெரிவிக்கவும், நிவாரண உதவிகளை பெற்றுக் கொள்ளமுடியும் என்றும்  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!