நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் முன்னிலையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆஜராக மாட்டார்!
வெள்ளை மாளிகை அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும் அந்நாட்டு நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் முன்னிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் அல்லது அவரின் சட்டத்தரணிகள் ஆஜராகப் போவதில்லை என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதியும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு முயற்சிப்பவர்களில் ஒருவருமான ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் சம்பந்தப்பட்ட யுக்ரைனிய நிறுவனமொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையை துரிதப்படுத்தும்படி ஜோர்டானிய ஜனாதிபதி வெலோடிமிர் ஸேலேன்ஸ்கியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தினார் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது ஜனாதிபதி ட்ரம்ப் இவ்வாறு வலியுறுத்தினார் எனக் கூறப்படுகிறது. இதனால், தனது தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக, தனது அதிகாரத்தை பயன்படுத்த முயற்சித்ததன் மூலம் அதிகார துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என டொனால்ட் டரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இக்குற்றச்சாட்டை நிராகரித்து வருகிறார். இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தி வருகிறது. இவ்விசாரணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இவ்விசாரணைக் குழுவின் முன்னிலையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அல்லது அவரின் சட்டத்தரணி எவரும் ஆஜராக மாட்டார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. நாடாளுமன்ற நீதியியல் குழுவின் தலைவர் ஜெரி நெட்லருக்கு எழுதிய கடிதமொன்றில், வெள்ளை மாளிகையின் ஆலோசகர் பெட் சிபோலோன் இதைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புலனாய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட ஆதாரங்கள், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக தேசத்துரோகம், லஞ்சம் அல்லது வேறு பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தி குற்றவியல் செயன்முறைகளை மேற்கொள்வதற்குப் போதுமானவையா என ஆராய்வதற்காக நாடாளுமன்ற விசாரணைக்குழு நாளை புதன்கிழமை சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.