புலனாய்வுத்துறையின் வீழ்ச்சியால் இஸ்லாமிய அடிப்படைவாதம் பிரசாரம் செய்யப்படுவதை தடை செய்ய முடியாதுள்ளது! -ஜனாதிபதி கோட்டாபய

0 1,238

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று (02) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை செயலகத்தில் சந்தித்தனர்.

விசாரணை ஆணைக்குழுவின் செயற்பணிகள் மற்றும் ஒழுங்கமைப்பினை தெளிவுபடுத்திய ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜானக்க டி சில்வா, இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினார்.

தாக்குதல் ஒன்று நடத்தப்படுமென முன்கூட்டியே கிடைக்கப்பெற்ற தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற் கொள்ளவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்தார். இதனை மறைப்பதற்காக சில அதிகாரிகள் பொய்யான ஆவணங்களை தயாரித்துள்ளதாக சந்தேகம் ஏற்படுவதாகவும் நீதியரசர் தெரிவித்தார்.

தாக்குதலுக்கான காரணத்தை சரியாக இணங்கண்டு, அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்திய ஜனாதிபதி , பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அபிலாஷையும் அதுவாகுமெனக் குறிப்பிட்டார். “நான் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றியபோது தேசிய பாதுகாப்பு சபை தினமும் கூடியது. புலனாய்வுத்துறை அதிகாரிகளுடன் நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் தொடர்ச்சியாக கலந்துரையாடினேன்.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் தகவல்கள் கிடைத்த மறுகணமே தாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டேன் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வந்து அடிப்படைவாத கருத்துக்களை பிரசாரம் செய்த 160 விரிவுரையாளர்கள் இவ்வாறே நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்” என ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் பாரதூரமான வகையில் சிந்தித்து செயற்படாமையினால் புலனாய்வுத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதென்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி , அதன் பெறுபேறாக இஸ்லாமிய அடிப்படைவாதம் பிரசாரம் செய்யப்படுவதைத் தடை செய்ய முடியாதுள்ளதெனத் தெரிவித்தார். தாக்குதல் தொடர்பான சகல தகவல்களையும் கண்டறிவதுடன், இத்தகைய தாக்குதல்கள் மீண்டுமொருமுறை இடம்பெறாதிருப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்ய வேண்டியதன் தேவையை வலியுறுத்தியதுடன், பாதுகாப்பு பொறிமுறை வீழ்ச்சியடைவதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டியதும் அவசியமாகுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஆணைக்குழுவுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி அவர்கள் இணக்கம் தெரிவித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஹால் சுனில் ராஜபக்ஷ, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல குமார அதபத்து மற்றும் நீதி அமைச்சின் முன்னாள் செயலாளர் டப்ளியூ.எம்.எம்.அதிகாரி ஆகியோர் இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.  

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!