ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிரான மனு தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு!
சாட்சியமளிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யாழ்;. நீதிவான் நீதிமன்றில் ஆஜராவதை தவிர்க்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதிவரை நீடிக்க கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தம் ஆகியோர் கடந்த 2011 ஆம் ஆண்டில் காணாமல்போனமை தொடர்பில் இடம்பெறும் வழக்கில் சாட்சியமளிப்பதற்காக யாழ் நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு (முன்னாள் பாதுகாப்பு செயலாளர்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றினால் கடந்த செப்டெம்பர் 24 ஆம் திகதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
லலித் மற்றும் குகன் காணாமல்போன சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, கடந்த செப்டெம்பர் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அந்நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
எனினும், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட காலப்பகுதியில் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றியதால் பாதுகாப்பு காரணங்கள் கருதி தன்னால் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜராக முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அவர் தெரிவித்திருந்தார்.
அதற்கமையவே, மேன்முறையீட்டு நீதிமன்றினால் இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த தடை உத்தரவே இவ்வாறு ஜனவரி 30 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.