Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
வாதுமை மரம் தான் என்னை வாழவைக்கும் தெய்வம்; வாதுமை பருப்புகளை சேகாித்து விற்பனை செய்யும் விஜேபால கூறுகிறார்
2016-05-02 22:20:07

(சிலாபம் திண்ணனூரான்)

 

அண்மையில் காலை நேரத்தில் பொரளை ஆனந்த மாவத்தையின் நடை பாதையின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்தோம். சித்திரை மாத கடும் வெயில் எங்களின் உடலை சுட, வீதியோரத்தின் நிழல் படிந்த மரத்தின் அடியில் நின்றோம்.

 

 

அதே மரத்தின் அடியில் பரட்டைத் தலையுடன் அழுக்கு படிந்த சட்டை, சாரம் உடுத்திய நிலையில் ஒருவர் வெற்றுத் தரையில் உட்கார்ந்திருந்தார். அவர் எங்களைப் பார்த்து அட்டகாசமாய் சிரிக்க நாங்களும் எங்களின் கேள்விக் கொக்கியை அவர் மீது ஏவி விட்டோம்.

 

எங்களுக்கு நிழல் தந்த அந்த மரம் ஒரு வாதுமை மரமாகும். அம் மரத்தை ஆங்கிலத்தில் Almond Tree எனவும் சிங்கள மொழியில் கொட்டங்கா எனவும் அழைப்பர். தமிழர்கள் இம் மரத்தின் விதை களுக்குள் உள்ள பருப்பை வாதாங் பருப்பு அல்லது வாதுமை பருப்பு என்பார்கள்.

 

இதன் சுவை முந்திரி மா பருப்பை போன்று சுவையாக இருக்கும். வாதுமை மா விதைகளை ஒரு கருங்கல்லின் மீது வைத்து மற்று மொரு சிறு கல்லால் உடைத்து பருப்பை வெளியே எடுத்து அம் மரத்து இலைகளினால் பொதி செய்து கொண்டு இருந்த அந்த நபர் எமது கேள்விகளுக்கு பதில் வழங்க மறுத்தார். 

 

பின்னர் அவரே பேச்சைத் தொடர்ந்தார். “என்னைப் பார்க்கையில் உங்களுக்கு வித்தியாசமான மனிதனாகத் தெரிகிறது தானே. சிறிது நேரம் இந்த இடத்திலேயே நில்லுங்கள். என்னைத் தேடி வருபவர் களை நீங்கள் பார்க்கையில் பிரமிப்படைவீர்கள்.

 

அந்த அதிர்வில் இந்த வெயில் சூடும் உங்களை விட்டுப் பறந்து விடும். அப்போது தான் எனது பெறுமதி உங்களுக்குத் தெரிய வரும்” என்றார் அந்த 52 வயது நபர். அவரின் அவ் அதட்டல் வார்த்தைகள் எம்மை பல விதத்திலும் யோசிக்க வைத்தது.

 

அடி மனதில் விழுந்திருந்த கீறல்களை நீக்கிக் கொண்டு அவரின் பெயரைக் கேட்டோம்.

 

“எனது பெயர் விஜயபால. எனது சொந்த ஊர் எல்பிட்டிய...” என எமக்கு அவர் தன்னைப் பற்றி கூற ஆரம்பித்த வேளையில்,  சுமார் என்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஜப்பானிய ஜீப் வாகனத்தில் அவ் இடத்துக்கு வந்து இறங்கிய பெண்ணைக் கண்டதும் நாமும் திகைத்துப் போய் விட்டோம்.

 

 

நவநாகரீக உடையுடன் காணப்பட்ட அப் பெண், புத்தம் புது நூறு ரூபாய் நோட்டை நீட்ட, பதிலுக்கு இரண்டு வாதுமை பருப்பு பொதி களை இவர் வழங்க, அப் பெண் வாகனத்தில் ஏறி பறந்தார்.

 

அப் பெண் போனதும் வெறித்து வீராதி வீரனைப் போல் எம் மீது பார் வையைச் செலுத்தினார் விஜயபால.

 

அப் பெண்ணுக்கு வயது 35 தான் இருக்கும். அவர் உடலில் ஒரு அழகும் மெருகும் ஏறியிருந்தன.  அவர் அவ்விடத்துக்கு வாகனத்தில் வந்தறங்கி வாதுமை பருப்பை கொள்முதல் செய்து சென்ற காட்சியைக் கண்டதும் எமது உடம்பு சில்லிட்டு ரத்தமே உறைந்தது. அக்காட்சியை என்றும் மறக்க இயலாது.

 

“இப்போது என்ன சொல்கிறீர்கள்? எனது வியாபாரம் எவ்வாறு நடை பெறுகிறது. இதுதான் எனது தொழில். இங்கு ஏ.சி. இல்லை. மின் விளக்கு இல்லை. மின்காற்றாடி இல்லை. 
 

மேசையோ கதிரையோ இல்லை. நான் எழுந்து சென்று வியாபாரம் செய்யவும் மாட்டேன். என்னைத் தேடித்தான் வாடிக்கையாளர்கள் வர வேண்டும். சிரிக்கவும் மாட்டேன், பேசவும் மாட்டேன்” என விஜயபால அட்டகாசமாய் கூறினார்.

 

அவர் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கையிலேயே மோட்டார் சைக்கிள்களில் விதவிதமான கார்களில் மற்றும் கால்நடையாகவும் என பலரும் தானாக வந்து வாதுமை பருப்பை விஜயபாலவிடம் கொள்முதல் செய்வதற்கு வந்து போனார்கள். 

 

இதைப் பார்த்ததும் எமக்கே வியப்பாக இருந்தது. அவரின் வார்த்தை களின் நம்பகத் தன்மையைக் கண்டு வியந்து போனோம்.

 

 

“விஜயபால ஐயா வாதுமை விதைகளை எப்படி சேகரிக் கிறீர்கள்” என மீளவும் அவர் மீது கேள்வி கொக்கியை போட்டோம்.

 

இந்த நிழல் தரும் மரத்திலிருந்து தானாக காய்ந்த விதைகள் கீழே விழும். அல்லது அந்த  இரும்பு கொக்கியின் மூலமாக காய்ந்த விதைகளை பறிப்பேன். எனக்கு இம் மரம் தான் தெய்வம். என்னை வாழ வைப்பதும் இம் மரமேயாகும்.

 

இம் மரமே எனக்கு மூன்று வேளையும் உண்ண உணவையும் கொடுக்கின்றது” என்றார். இப்போது அவரின் கண்கள் இரண்டும் காந்தக் கல்லாய் இருந்தன. 

 

“நீங்கள் திருமணம் செய்யவில்லையா?” எனக் கேட்டோம். “நான் இப்போது நிம்மதியாக இருப்பது உங்களுக்கு கவலையாக இருக்கின்றதா? என எம்மை வார்த்தைகளால் அதட்டினார்.

 

“நான் திருமணம் செய்யவில்லை. இந்த மரத்தைப் போன்று நானும் தனி மரம் தான். திருமணம் முடித்திருந்தால் பல தொல்லைகளுடன் நான் வாழ வேண்டி இருந்திருக்கும்.

 

 

திருமணம் முடித்தவர்கள் படும் அவஸ்த்தைகள் எனக்கும் தெரியா மல் இல்லை. திருமண வாழ்க்கையானது என்னைப் பொறுத்தவரை பெரிய நரகம்.

 

இப்போது தனிக்கட்டையாக இருந்தாலும் சுதந்திர மனிதன். கை நிறைய எனது முயற்சியின் பலன் விளைச்சலைத் தருகின்றது.

 

என்னை முதலில் அடையாளம் கண்டதும் என்னைப்பற்றி வித்தியாசமாக எண்ணியிருப்பீர்கள். வெளியே தான் அழுக்குடன் இருக்கின்றேன். உள்ளே இருக்கும் எனது மனசு சுத்தமானது.

 

நிலத்தை உடைத்துக் கொண்டு வெளிவரும் நீர் ஊற்றைப் போன்று எனது மனதும் சுத்தமானது. மனதில் அழுக்கு இல்லை” என ஒரு போடு போட்டார் விஜயபால. அவர் மனம் திறந்து பேசுவதைக் கண்டு நாமும் சிதறிப் போய் விட்டோம்.

 

உங்களுக்கு கிராமத்தில் சொத்துக்கள் உள்ளதா? என சற்று பயத்தோடு கேள்வியை எழுப்பஎனக்கு கிராமத்தில் வயல் நிலம் உள்ளது. அதை எனது அக்காவின் பார்வையில் விட்டுள்ளேன்.

 

எனது சேமிப்பையும் எனது அக்காவுக்கே தருகின்றேன். பணம், சொத்து எல்லாம் எனக்கெதற்கு. நான் தனி மரம். அதனால் தான் இந்த மரத்தை நம்பி வாழ்கின்றேன்.

 

இம் மரம் ஒரு தகப்பனை பாதுகாப்பது போன்று என்னை பாதுகாக் கின்றது. மூச்சுவிடும் மனிதனை நம்ப இயலுமா? கூட இருந்தே குழியைப் பறிப்பார்கள்.

 

வாழவே விடமாட்டார்கள். ஆனால் வாயே பேச இயலாத இம் மரத்தை நம்பி நான் வாழ்கின்றேன்” என்றார் விஜயபால.  இவரின் இத் தத்துவ வார்த்தைகள் எம்மையும் கொஞ்சம் சுடத்தான் செய்தது. 

 

“இவ் வியாபாரம் பற்றி சொல்ல இயலுமா?” என அடுத்த கேள்வியை  கேட்டதும் தான் மூச்சை இரைத்தவாறு எம்மை கூர்மை யாகப் பார்த்தார் விஜயபால.

 

“என்னப்பா காலையிலேயே நொய் நொய்யென கேள்விகளை கேட்கிறீர்கள். இப்போது பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள்.

 

எப்படி பெரிய பெரிய பணக்கார பெண்கள், ஆண்கள் வருகிறார்கள்? 

 

பெண்கள் வீட்டுச் சுவருக்கு பெயின்ட் பூசிய மாதிரி முகம் முழுவதும் மேக்கப் போட்டுக் கொண்டு உடல் முழுவதும் வாசனைத் திரவியங் களை தெளித்துக் கொண்டு சிற்பி செதுக்கிய சிலையாக என்னிடம் வாதுமைப் பருப்புக்களை கொள்முதல் செய்ய வருகிறார்கள். 

 

நான் நோனா, மாத்தையா என கூவுவதும் இல்லை. கெஞ்சுவதும் இல்லை. பணத்தை நீட்டுவார்கள். வாதுமைப் பருப்பு பார்சலை கொடுத்து விடுகிறேன்.

 

நீங்கள் கடை வீதிகளுக்கு சென்று பாருங்கள். கடைகளில் பத்து ரூபாய் லேடிஸ் கைக்குட்டையை விற்க எவ்வளவு பேசுகிறார்கள். நான் ஐந்து வருடமாக இந்த தொழிலை வெற்றிகரமாக செய்து வரு கின்றேன். பாடசாலை இடம்பெறும் நாட்களில் விற்பனை அதிக மாகும். மாணவ சமூகமும் எனது வாடிக்கையாளர்களே” என்றார் அவர்.

 

நீங்கள் தங்குவது எங்கே? என்றதும் இரவில் நடை பாதையில் தங்குவேன். ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிப்பேன். குளிப்பதற்கு குணசிங்கபுர வாளிக் கிணற்றுக்கு செல்வேன். இதுதான் என் வாழ்க்கை” என விஜயபால பதிலளித்தார். 

 

“பொழுது போக்கு ஏதும் உண்டா?” 

 

“ஏனையோரைப் போன்று பொழுதுபோக்கு எனக்கும் உண்டு. குதி ரைப் பந்தய விளையாட்டில் ஈடுபடுவேன். பெரிய செல்வந்தர்களும் மனைவிகளுக்கு தெரியாமல் குதிரை பந்தய விளையாட்டில் ஈடுபடுவார்கள்.

 

அவர்களும் எனது அருகிலேயே உட்கார்ந்து பந்தயத்தில் ஈடுபடு வார்கள். பணம் என்றதும் அந்தஸ்த்து, மானம், மரியாதை எல்லாம் ஓடி விடுகிறது. எப்படிப்பட்ட மாய உலகம் இது” என்றார் விஜயபால. 

 

 

“இவ்வளவு எல்லாம் பேசும் உங்களுக்குள் பெண் ஆசை இல் லையா” எனவும் கேட்டோம் சற்று பயத்துடன். 

 

“பெண் ஆசை யாருக்கு இல்லை? பெண் ஆசை இல்லையென எவராவது சொல்வார்களேயானால் அவன் ஏதோ ஒரு வித நோயாளி யாவான்.

 

என்னிடம் அழகான பெண்கள் பருப்பு கொள்முதலுக்கு வரத்தான் செய்கிறார்கள். அவர்கள் எனது வாடிக்கையாளர்கள். நேர்மையாக அவர்களிடம் நான் நடந்து கொள்வேன். 

 

எதையும் ரசிக்கத் தெரிய வேண்டும். அதற்காகத் தான் இயற்கை யையும் அழகையும் படைத்த இறைவன் அதனை ரசிக்க மனிதனை படைத்துள்ளான்.

 

ரசிக்கத்தான் மனிதப்பிறப்பு எடுத்துள்ளோம். பெண் ஆசை இருக்கத் தான் வேண்டும். அது அளவுடன் இருப்பது நல்லது. அளவு மீறினால் அது வெறியாகும்.

 

அந்த வெறி பல தவறுகளை செய்யத் தூண்டும். இறுதியில் அவ் ஆசை நம்மை நாசப்படுத்திவிடும். பெண் இல்லா ஊரில் யாராலும் வாழ முடியுமா? 

 

இங்கு வரும் பெண்கள் என்னை ரசிக்கமாட்டார்கள். இது இரகசிய மல்ல. ஆனால் நான் இயற்கையை ரசிப்பது போன்று அனைத்தையும் ரசிப்பவன். நானும் மனிதன் தானே. எனக்கும் ஆசை இல்லாமல் இல்லை” என படார் என பதிலளித்தார் விஜயபால.

 

அவரின் வெளிப்படையான பேச்சும் வார்த்தைகளின் தெளிவும் மன உறுதியும் எம்மையும் மிரட்டின. எங்களுக்கும் விஜயபாலவுக்கும் இடையே இடம்பெற்ற வெளிப்படையான பேச்சை முடித்துக் கொண்டு வீதிக்கு இறங்கினோம்.

 

அப்போது வாதுமை கொட்டைகளை கருங்கல்லில் வைத்து மற்றுமொரு கல்லால் தட்டும் சத்தம் எமது காதுகளில் சங்கீதமாய் விழுந்தது. 

 

(படங்கள் கே.பி.பி.புஷ்பராஜா)

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
JOHNJEBARAJ R2016-05-17 19:42:14
Nice man.....
0
0
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.