Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இசைஞானியின் மெட்டை பிரமாதப்படுத்திய கலைஞரும் காதலைக் காதலிக்க வைத்த பாடலும்... ...
By General | 2014-03-23 20:45:56

அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா

 

அது 80 களின் நடுப்பகுதி, இளைஞானி இளையராஜா ராஜா உச்சத்தில் இருந்த காலம். அவரைப்போலவே அவரது இசைக்கலைஞர்களும். மணிரத்னம் அப்போது தனது தனித்துவத்தைக் காட்டத் தொடங்கியிருக்கவில்லை . ஆனால் அவரால் ராஜாவிடம் அருமையான பாடல்களைத் தனது படங்களுக்கு வாங்கிக் கொள்ளும் திறமை அப்போதே இருந்தது. அப்போது அவர் ஒரு படத்தை இயக்கியிருந்தார். அதில் இழந்த காதலியை நினைத்து நாயகன் பாடுவதாக ஒரு காட்சி.

 

ராஜா மணிரத்னத்தின் எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு இதயத்தின் அடியிலிருந்து வெளிப்படும் மெட்டொன்றைப் போட, பாடலும் எழுதப்பட்டாயிற்று. அடுத்த நாள் பிரசாத் ஸ்டூடியோவில் பாடலின் ஒலிப்பதிவு என்று ராஜாவின் உதவியாளர் இசைக்கலைஞர்களுக்கு அறிவித்திருந்தார்.

 

அனேகமான பாடல் பதிவுகளுக்கு நான்கு தொடக்கம் 6 மணித்தியாலங்களே பொதுவாக ராஜாவால் ஒதுக்கப்படுகின்றது. இதற்குள்ளேதான் பாடலுக்கான, இசைக் குறிப்புக்களைப் பரிமாறிக்கொள்ளுதல், ஒத்திகை பின் ஒலிப்பதிவு என்பன நடைபெறுவதாக அறிகின்றேன்.

 

அந்த நாள்.. பாடலின் ஒலிப்பதிவன்று காலை 7 மணியிலிருந்து மதியம் ஒருமணிவரை அந்தப் பாடலுக்காக கலைஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஏழு மணிக்கே எல்லோரும் ஸ்டூடியோவில் ஆஜராகியிருந்தனர். ஆனால் முக்கியமான ஒரு கலைஞர் மட்டும் வரவில்லை.. .. சரி விரைவில் வந்துவிடுவார் என எண்ணியபடி மற்றய கலைஞர்கள் ராஜாவின் இசைக்குறிப்பை படித்து அதை உள்வாங்கிய பின் ஒத்திகையும் பார்க்கத் தொடங்கியிருந்தனர். அந்த முக்கியமான கலைஞர் இன்னும் வரவில்லை..

 

அப்போதெல்லாம் இப்போதையப் போல செல்போன் வசதியெல்லாம் கிடையாது. எனவே அந்தக் கலைஞர் வருவாரா இல்லையா என்பதை எவராலுமே உறுதிப்படுத்த முடியவில்லை.

 

பாடலுக்காக பல மணிநேர ஒத்திகை முடிவடைந்து ரேக் போகலாம் என முடிவெடுக்கப்ப்ட்டாயிற்று.. ம்ஹூம்... இப்போதும் அந்த முக்கியமான கலைஞர் வந்து சேரவில்லை. சரி அவரால் இன்று வரமுடியாது என முடிவுக்கு வந்து அவரில்லாமலேயே பாடலைப் பதிவு செய்து விடுவோம் என வேறு வழியில்லாமல் முடிவெடுக்கப்பட்டு வழமையின் படி தேங்காய் உடைக்கப்பட்டு ஒலிப்பதிவுக் கூடத்துக்குள் எல்லா கலைஞர்களும் தமக்குரிய இடங்களில் அமர்ந்து பாடல் தொடங்கவும் கதவு திறக்கப்படுகின்றது அங்கே அந்தக் கலைஞன் அப்போதுதான் ஸ்டூடியோவுக்குள் வந்து சேர்கிறார்..

 

இனி என்ன செய்வது ? பல மணிநேர ஒத்திகையின் பின் பாடல் பதிவிற்கான இறுதிக்கட்டத்தில் இவர் வந்திருக்கிறாரே.. இனி மீண்டும் இவரிற்கான ஒத்திகைக்கு நேரம் ஒதுக்க வேண்டுமா என்ன? இந்த எண்ணம் சாதாரணமான எல்லோருக்கும் ஏற்பட்டிருக்குமல்லவா? .அங்குதான் வித்தியாசம் இருக்கின்றது. அந்தக் கலைஞர் ஒத்திகை ஒன்றுக்கும் போகவில்லை.. எதுவுமே பார்க்கவில்லை.. கேட்கவில்லை.. ராஜாவின் இசைக்குறிப்பை வாங்குகின்றார். ஓகே ரேக் போகலாம் என்கிறார்.

 

 

ஒரு அந்தரிக்கும் ஆன்மாவின் அழுகுரலை.. பிடுங்கி எறியப்பட்ட இதயத்தின் அலறலை,.. சொல்வதற்கு வார்த்தையில்லாமல் தவிக்கும் ஒருவனின் வலியை பாடலின் ஆரம்ப இசையின் ஆரம்பத்திலேயே, நெத்தியடியாக, கேட்பவர் நெஞ்சுக்குள், சம்மட்டியாக இறக்கி, பாடல் இடம்பெறும் சூழ்நிலையை புரியவைக்க தீர்மானித்த ராஜா, அதற்காகத் தெரிவு செய்த வாத்தியம். பின்னணியில் அமானுஷ்ய அமைதியுடன் கூடிய ஒரு ஒற்றைப் புல்லாங்குழல்.

 

ராஜாவின் இசைக்குறிப்புக்கு ஏற்ப புல்லாங்குழல் ஓ.. வென உச்சஸ்தாயியில் கதறத் தொடங்கியது.. காதலின் இழப்பை, காதலியின் பிரிவை, உலகத்தில் தனித்து விடப்பட்ட ஒருவனின் தவிப்பை .முதல் 22 செக்கனில் அச்சொட்டாகப் புரிய வைத்து கேட்பவர்களின் நெஞ்சைப் பதறவைக்கிறது அந்தப் புல்லாங்குழல். அது . கதறியபடியே செல்லவும் 22 வது செக்கனிலிருந்து ... மெது மெதுவாக குருவிகளின் சத்தங்கள் வந்து புல்லாங்குழலுடன் சேர அதனைத் தொடர்ந்து பாலு படத்தின் நாயகனின் உள்ளக் குமுறலை அநாயாசமாக ஒவ்வொரு வரிகளிலும் கொண்டுவந்து உச்சரித்துப் பாடத்தொடங்கவும் அவருடன் கிட்டாரின் Vamping உடன் Electric Piano வும் சேர்ந்து கொள்கின்றன.

 

அவற்றைத் தொடர்ந்து மெது மெதுவாக தாள வாத்தியக் கலைஞர்களும் ஏனைய கலைஞர்களும் இணைந்து ஆர்ப்பட்டமில்லாத மென்மையான ஒரு மெலடியை உருவாக்கத் தொடங்குகின்றார்கள். பாட்டென்றால் பாட்டு அப்படியொரு பாட்டு. அந்தப் பாட்டு தொடங்கியபோது அந்த ஒற்றைப் புல்லாங்குழல் கொடுத்த அதே மன உணர்வை இறுதிவரை சுமந்து செல்கின்றது அந்தப் பாட்டு.

 

இந்தப் பாட்டின் ராஜா முத்திரையை ராஜா பதித்துள்ள இடம் ஆரம்ப மற்றும் இடையிசைகளுக்கிடையே இருக்கும் அசாத்தியமான ஒற்றுமை. எப்படி ஆரம்ப இசையை ஒரு ஒற்றை புல்லாங்குழலின் கதறல் மூலம் ஆரம்பித்தாரோ அதே உணர்வுக்கு கொஞ்சமும் குறைவில்லாத உணர்வை முதலாவது இடையிசையும் தருகின்றது. ஆனால் இங்கே வித்தியாசம் என்னவென்றால் ஒற்றை புல்லாங்குழலுக்குப் பதிலாக ஒற்றை வயிலினின் கேவலும் அதை முன்னிறுத்திக்காட்டும் வயிலின் கூட்டணிகளின் அற்புதமான பின்னணியிசையும் தான் . ..

 

சரி, இனி நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த இசைக்கலைஞர் இந்தப் பாட்டில் எப்படி சம்பந்தப்படுகின்றார்? ஒரு ஒத்திகை கூடப் பார்க்காத அவரின் வாசிப்ப்பில் பிசிறல்கள், பிழைகள், இடைஞ்சல்கள் ஏதாவது ஏற்பட்டதா?

 

பாடலுக்கான ஒரு ஒத்திகையில் கூடப் பங்கேற்காத அந்தக் கலைஞர்தான், இசைஞானி அந்தப்பாட்டுக்காக எழுதிக் கொடுத்த Harmony யினை அற்புதமாக பின்னணியில் பண்ணியிருப்பார். பாடலுடன் சென்று கொண்டேயிருப்பார்... எங்கும் எந்த இடத்திலும் ஒரு சிறு பிழைகூட அவர் விடவில்லை.. ஒரு பிசிறும் இல்லை.. ராஜாவின் இசைக்குறிப்பை அச்சு அசலாக அலாக்காக ஒரே மூச்சில் வாசித்து முடித்து சக இசைக்கலைஞர்களை ஆச்சரியப்படுத்தி சந்தோஷப்பட வைத்தார். அவர்தான்..

 

இந்தியாவின் தலை சிறந்த கீபோர்ட் கலைஞர்களில் ஒருவர் என அறியப்படும் விஜி மனுவல் அந்தப்பாட்டுக்கு அவர் ஹார்மனி பண்ணிய வாத்தியம் Electric Piano..
பாடல் : இதயக்கோயில் படத்தில் இடம்பெற்ற 'நான் பாடும் மௌனராகம் கேட்கவில்லையா..' என்ற பாலுவின் மெலடி.

 

 

இந்தச் சம்பவத்தை நேரே பார்த்தசாட்சியாக எனக்குக் கூறிப் பிரமூப்பூட்டியவர் அவருடன் கூடவே அங்கிருந்து பேஸ் கிட்டார் வாசித்த இன்னொரு மேதை சசி அண்ணர். விஜி மனுவல் அவர்களுடன் 35 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றாகப் பணிபுரிந்த சக கலைஞன் சசி அண்ணர்.

 

அவரின் பேஸ் கிட்டார் வாசிக்கும் ஸ்டைலைப் பற்றி பிரமிக்கும் பேஸ் கிட்டார் கலைஞர்களை எனக்குத் தெரியும். அவரின் வாசிப்பில் காணப்படும் தனித்துவமும் நுணுக்கமும்தான் பேஸ் கிட்டார் பழகுவதற்கான தங்களின் ஐnளிசையவழைn என்று எத்தனையோ பேர் எனது பதிவுகளுக்கே பின்னூட்டமிட்டுள்ளார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தனது சக கலைஞனைப் பற்றிக் கூறும் போது விஜி மனுவல் சாரா... அவரைப் போல ஒரு மேதையை இனி வருங்காலத்தில் பார்க்க முடியுமா என்பது கேள்விக்குரிய விடயம்தான்.. என கவலைப்படுவதை நான் அடிக்கடி கேட்கின்றேன்..

 

அந்த மகா கலைஞன் திரு.விஜி மனுவல் விபத்தில் அகப்பட்டு தற்போது தேறிவருகின்றார். அவர் விபத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு விரைவில் வரவேண்டும்.

 

( விஜி மனுவல் அவர்களை கீபோர்ட் கலைஞர் என்றுதான் பரவலாக எல்லோருக்கும் தெரியும்இ ஆனால் ராஜாவின் ஆரம்பப்பாடல்கள் சிலவற்றுக்கு அவர் பேஸ் கிட்டாரும் வாசித்துள்ளார். அவற்றில் பிரியா படத்தில் இடம்பெற்ற டார்லிங்..டார்லிங்..டார்லிங்...

 

 

கிழக்கே போகும் ரயிலில் இடம்பெற்ற 'பூவரசம் பூ பூத்தாச்சு' என்ற பாட்டும்..

 

 

சுஜாதா தனது பதின்ம வயதில் பாடிய 'காதல் ஓவியம் கண்டேன்.. கனவோ..நினைவோ..

 

என்ற பாட்டும் குறிப்பிடத்தக்கவை. )

மேலே நான் குறிப்பிட்டுள்ள விஜி மனுவலின் புலமைக்குச் சான்று பகர்ந்த நான் பாடும் மௌனராகம்.. என்ற பாட்டு ஏற்படுத்திய தாக்கத்தால்தான் மணிரத்னம் தான் எடுத்த அடுத்தபடத்துக்கு மௌனராகம் எனப் பெயரிட்டாராம். இ அவரை ஒரு வித்தியாசமான இயக்குனராக முதலில் அடையாளம் காட்டிய படம் மௌனராகம்தான்.

( படத்தில் விஜி மனுவல்இ ட்ரம்ஸ் கலைஞர் .கொண்டக்டர், புருஷோத்தமன், ராஜாவின் முன்னாள் புல்லாங்குழல்க் கலைஞன் சுதாகர். புகைப்படம் நன்றி Eddie Dhinesh )

 

 

மேலும் சில 'நான் ரசித்த பாடலும் இசையும்' கட்டுரைகள்:

 

*தமிழ் திரை இசையில் செல்லோ (Cello) இசைக்கருவி

 

*இசையமைப்பாளர் வித்யாசாகர்: தமிழ் திரையிசையின் வி.வி.எஸ். லக்ஷ்மன்

 

* இசைஞானியின் இசை தளபதி சதா

 

* இசைஞானியின் இசைக்கற்பனைக்கு உயிர்கொடுத்த விஜி மனுவல்

 

* விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

 

* புல்லாங்குழலிசையை தனது தேடலால் நவீனமாக்கிய நவீன் குமார்

 

* 'அடி ராக்கம்மா கையத்தட்டு' பாடல் தரும் புதுவித இசை அனுபவம்

 

* இசைஞானி : Counterpoint மூலம்  Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 2)

 

* இசைஞானி :  Counterpoint  மூலம்  Count   பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 1)

 

*  'இளைய நிலா பொழிகிறதே ....' பாடல் முழுவதும் பயணிக்கும் கிட்டாரை வாசித்தவர் யார் ?

 
* ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்....

 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.